தூத்துக்குடி அருகே பாதயாத்திரை பக்தர் காரில் கடத்தல் 4 பேர் கைது


தூத்துக்குடி அருகே பாதயாத்திரை பக்தர் காரில் கடத்தல் 4 பேர் கைது
x
தினத்தந்தி 20 Aug 2019 10:30 PM GMT (Updated: 20 Aug 2019 7:32 PM GMT)

தூத்துக்குடி அருகே பாதயாத்திரை பக்தரை காரில் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஸ்பிக்நகர், 

தூத்துக்குடி அருகே பாதயாத்திரை பக்தரை காரில் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பாதயாத்திரை

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா உப்பிலிகுண்டு மேல தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 27). இவர் அருப்புக்கோட்டை மல்லான்கிணறு காவல் நிலையத்தில் போலீசாக உள்ளார். இவரும், எலக்ட்ரீசியனான அதே பகுதியை சேர்ந்த லிங்கம் மகன் நாகராஜ் (24) உள்பட 30-க்கும் மேற்பட்டவர்கள் கடந்த 16-ந்தேதி இரவு மதுரையில் இருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரை வந்தனர். அவர்கள் நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி அருகே முத்தையாபுரம் எம்.சவேரியர் வடபத்திரகாளியம்மன் கோவிலில் தங்கி விட்டு அதிகாலை 3 மணிக்கு மீண்டும் திருச்செந்தூர் நோக்கி புறப்பட்டனர். விஜயகுமார், நாகராஜ், ரமேஷ், மருது என்ற மாயா உள்ளிட்டவர்கள் பொட்டல்காடு விலக்கு பகுதியில் உள்ள சிமெண்டு குடோன் அருகே சென்ற போது, எதிரே அடையாளம் தெரியாத 2 நபர்கள் வந்தனர். அவர்கள் நாகராஜை வழிமறித்து, அவரிடம் தகராறு செய்து அங்கு இருந்து தரதரவென இழுத்து சென்றனர்.

காரில் கடத்தல்

சிறிது தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரில் இருந்து மதுரை உப்பிலிகுண்டு பகுதியை சேர்ந்த பாலமுருகன் உள்பட சிலர் காரில் இருந்து இறங்கினர். அவர்கள் நாகராஜிடம் ஒரு பெண்ணின் பெயரை சொல்லி அவர் எங்கே? என்று கேட்டனர். தொடர்ந்து நாகராஜை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்தி சென்றனர். இதனை தடுக்க வந்தபோது நாகராஜூடன் வந்த சிலர் தாக்கப்பட்டனர்.

இதுகுறித்து விஜயகுமார் மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டுக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற முத்தையாபுரம் போலீசார் அங்கு விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகராஜ், பாலமுருகன் மனைவியுடன் பழகி வந்ததும், பின்னர் அந்த ஊர் பெரியவர்கள் நாகராஜனை கண்டித்து அனுப்பியதும் தெரியவந்தது.

தப்பினார்

இதற்கிடையே காரில் கடத்தி செல்லப்பட்ட நாகராஜ், பந்தல்குடியை அடுத்துள்ள உடையநாதபுரம் பகுதியில் வைத்து இயற்கை உபாதை கழிக்க வேண்டி காரில் இருந்து இறங்கி உள்ளார். அப்போது காட்டு பகுதியில் அவர் தப்பி சென்று விட்டாராம். இதனையடுத்து பாலமுருகன், பனையூர் அருகே உள்ள சொட்டதட்டியை சேர்ந்த முருகன் மகன் பிரகாஷ் (29), அவரின் தம்பி ராமசந்திரன் (27), பாலு மகன் வினோத் (19), ஆண்டி மகன் விஜய் (22), மணிகண்டன் ஆகியோர் காரில் மதுரை நோக்கி தப்பி சென்று கொண்டிருந்தனர். இதற்கிடையே முத்தையாபுரம் போலீசார் மதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

4 பேர் கைது

கார் எலியார்பத்தி சுங்கச்சாவடி வழியாக சென்ற போது போலீசார் காரை வழிமறித்தனர். இதனை பார்த்த காரில் இருந்தவர்கள் தப்பி சென்று விட்டனர். பிரகாஷ் என்பவர் மட்டும் போலீசில் மாட்டி கொண்டார். பின்னர் மதுரை போலீசார் உதவியுடன் ராமசந்திரன், வினோத், விஜய் ஆகியோரை பனையூர் பகுதியில் வைத்து முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு ஆகியோர் கைது செய்தனர். பின்னர் போலீசார் அவர்களை நேற்று இரவு முத்தையாபுரம் போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான பாலமுருகன் மற்றும் மணிகண்டன் ஆகியோரை முத்தையாபுரம் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story