கால்வாய் தூர் வாராததால் பள்ளி வளாகத்திற்குள் செல்லும் கழிவுநீர் - மாணவ, மாணவிகள் அவதி


கால்வாய் தூர் வாராததால் பள்ளி வளாகத்திற்குள் செல்லும் கழிவுநீர் - மாணவ, மாணவிகள் அவதி
x
தினத்தந்தி 20 Aug 2019 9:45 PM GMT (Updated: 20 Aug 2019 8:25 PM GMT)

கால்வாய் தூர்வாரதால் பள்ளி வளாகத்திற்குள் செல்லும் கழிவு நீரினால் மாணவ, மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

வாணாபுரம்,

வாணாபுரத்தில் காட்டுவாமரம் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்று பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி முன்பு கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இந்தக் கால்வாய் தூர்ந்து போனதாலும் சரியான முறையில் தூர் வாராததாலும் புதர்கள் மண்டி காணப்படுகிறது.

அதனால் மழை பெய்யும்போது கழிவுநீர் கால்வாய் வழியாக செல்லாமல் பள்ளி வளாகத்திற்குள் சென்று குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் மாணவ, மாணவிகளுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்கள் கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

கழிவுநீர் தேங்கி நிற்பதால் மாணவ-மாணவிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே உடனடியாக கால்வாயை தூர்வாரி கழிவுநீர் கால்வாய் வழியாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவ- மாணவிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story