கடலூரில், அரசு டாக்டர்கள் மனித சங்கிலி போராட்டம்
கடலூரில், அரசு டாக்டர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
கடலூர்,
தகுதிக்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு டாக்டர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தமிழக அரசு, டாக்டர்களுக்கு பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்ட அனைத்து அரசு டாக்டர்கள் சங்கத்தினர் நேற்று மஞ்சக்குப்பம் டவுன்ஹால் அருகில் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கேசவன் தலைமை தாங்கினார். டாக்டர்கள் சாமிநாதன், சத்தியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் டாக்டர்கள் ஆறுமுகம், ஸ்ரீதர் மற்றும் ஒரத்தூர், நடுவீரப்பட்டு, மங்களூர், பெண்ணாடம், புதுச்சத்திரம் போன்ற பல்வேறு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களும், பண்ருட்டி, கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம் ஆகிய அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கும் டாக்டர்கள் என 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக அவர்கள் கோரிக்கைகளை விளக்கி கோஷமிட்டனர். இதையடுத்து வருகிற 23-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருப்பதாகவும், 27-ந்தேதி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் ஒருங்கிணைப்பாளர் கேசவன் தெரிவித்தார்.
Related Tags :
Next Story