சிங்கம்புணரி பகுதியில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் சாலைகள்; சீரமைக்க நடவடிக்கை தேவை


சிங்கம்புணரி பகுதியில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் சாலைகள்; சீரமைக்க நடவடிக்கை தேவை
x
தினத்தந்தி 21 Aug 2019 10:15 PM GMT (Updated: 21 Aug 2019 5:11 PM GMT)

சிங்கம்புணரி பகுதியில் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளித்து வருகிறது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரியில் இருந்து திண்டுக்கல்-காரைக்குடி செல்லும் சாலை, பெரியகடை வீதி-மேலூர் சாலை உள்ளிட்ட சாலைகளில் ஆங்காங்கே பள்ளமாக காணப்பட்டதால் இந்த சாலைகளை கடந்த சில மாதத்திற்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தார்ச்சாலையாக அமைத்தனர். கடந்த சில தினங்களாக சிங்கம்புணரி பகுதியில் அவ்வப்போது சிறிய அளவில் மழை பெய்து வருகிறது. இந்த சிறிய மழைக்கே இந்த சாலைகளில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.

தற்போது பெய்த இந்த மழையின் காரணமாக ராமர் கோவில் சந்திப்பு, பஸ் நிலையம் எதிர்புறம், மசூதி பகுதி, நான்கு ரோடு சந்திப்பு, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பகுதி, சந்திவீரன் கூடம் மற்றும் பெரியகடை வீதி ஆகிய பகுதியில் உள்ள சாலைகளில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு விபத்து ஏற்படும் நிலை உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்ததாவது:-

சிங்கம்புணரி பகுதியில் தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் வெளியூர்களில் இருந்து வந்து செல்கின்றன. சமீபத்தில் பெய்த மழையினால் இப்பகுதியில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டிகள் இந்த குழிகள் இருப்பது தெரியாமல் அதில் விழுந்து காயமடைகின்றனர். எனவே அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story