தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் உத்தரவு


தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் உத்தரவு
x
தினத்தந்தி 21 Aug 2019 11:00 PM GMT (Updated: 21 Aug 2019 6:58 PM GMT)

தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சாவூர்,

தஞ்சை சுற்றுலா மாளிகையில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் மணிவாசன் தலைமையில், கலெக்டர் அண்ணாதுரை முன்னிலையில் குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகளின் முன்னேற்றம் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் காவிரி, வெண்ணாறு மற்றும் கல்லணை கால்வாய் கோட்டங்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்வதற்கு திட்ட மிடப்பட்ட எண்ணிக்கை மற்றும் தூர அளவு, தற்போது முடிக்கப்பட்டுள்ள பணிகளின் எண்ணிக்கை மற்றும் தூர அளவு, நடைபெற்று கொண்டிருக்கும் பணிகளின் முன்னேற்றம் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தினார்.

விரைந்து முடிக்க வேண்டும்

அப்போது முதன்மை செயலாளர் மணிவாசன் கூறுகையில், “தூர்வாரும் பணிகளை சிறப்பு கண்காணிப்பு ஐ.ஏ.எஸ் அலுவலர்கள் மேற்பார்வையிட்டு துரிதப்படுத்த வேண்டும். மேலும் இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பொதுப்பணித்துறையின் பிற பிரிவுகளிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ள உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் மூலம் தூர்வாரும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்

தூர்வாரப்படும் கால்வாய்கள் மற்றும் வாய்கால்களின் இருபுறங்களிலும் நேர்த்தியான முறையில் மண்ணை எடுத்து சமன்படுத்தி, இருகரைகளின் வெளிப்புறங்களிலும் சரியான இடைவெளியில் மரக்கன்றுகளை நட வேண்டும்”என்றார்.

கூட்டத்தில் தூர்வாரும் திட்ட பணிகளின் சிறப்பு கண்காணிப்பு அலுவலர்கள் ராஜகோபால் சுன்காரா, ஜெய சந்திர பானுரெட்டி மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

Next Story