திருச்சி படைக்கலன் தொழிற்சாலை ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம் பெண் மயங்கி விழுந்தார்


திருச்சி படைக்கலன் தொழிற்சாலை ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம் பெண் மயங்கி விழுந்தார்
x
தினத்தந்தி 22 Aug 2019 4:30 AM IST (Updated: 22 Aug 2019 1:12 AM IST)
t-max-icont-min-icon

தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருச்சியில் படைக்கலன் தொழிற்சாலை ஊழியர்கள் நேற்று 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், ஊழியர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பொன்மலைப்பட்டி,

இந்தியா முழுவதும் 41 படைக்கலன் தொழிற்சாலைகள் உள்ளன. தமிழ்நாட்டில் 6 தொழிற்சாலைகள் உள்ளன. அவற்றில் 2 தொழிற்சாலைகள் திருச்சியில் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் துப்பாக்கிகள் மற்றும் ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த தொழிற்சாலைகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த படைக்கலன் தொழிற்சாலைகளை தனியாருக்கு மாற்ற மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சாலை ஊழியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினார்கள். ஆனால், மத்திய அரசு இதனை கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் 41 படைகலன் தொழிற்சாலைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒரு மாதம் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருப்பதாக அறிவித்திருந்தனர். அதன்படி திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் அதிகாரிகளும் ஊழியர்களும் நேற்று முன்தினம் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

நேற்று 2-வது நாளாக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஒரு சில உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மட்டும் வேலைக்கு சென்றார்கள். அவர்களை வேலைக்கு செல்ல விடாமல் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்த போலீசாருக்கும், ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதுடன் தள்ளுமுள்ளு ஆனது.

இந்நிலையில் எச்.ஏ.பி.பி. தொழிற்சாலையில் உள்ள பெண் ஊழியர்களும், ஆண் ஊழியர்களும் தொழிற்சாலை முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் ஒரு பெண் ஊழியர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சக ஊழியர்கள் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

Next Story