நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்றி குளங்களை தூர்வார வேண்டும்: குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை


நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்றி குளங்களை தூர்வார வேண்டும்: குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 23 Aug 2019 3:30 AM IST (Updated: 23 Aug 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்றி குளங்களை தூர்வார வேண்டும் என்று நெல்லையில் நேற்று நடந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

நெல்லை, 

நெல்லை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். வேளாண்மைத்துறை இணை இயக்குனர் கிருஷ்ணன் பிள்ளை முன்னிலை வகித்தார். கூட்டத்தை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் ஆண்டுக்கு இயல்பான மழை அளவு 814.80 மி.மீ. ஆகும். ஆகஸ்டு மாத இயல்பான மழை அளவு 23.30 மி.மீ., இந்த மாதம் 21-ந் தேதி வரை 81.08 மி.மீ. மழை பெய்துள்ளது. நடப்பு மாதம் வரை இயல்பான மழை அளவு 298.8 மி.மீ. ஆகும். இதுநாள் வரை 232.59 மி.மீ. மழை பெய்துள்ளது.

தற்போது அணைகளில் 43 சதவீதம் நீர்இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 72 சதவீதம் நீர்இருப்பு இருந்தது. கார் பருவத்தில் நடப்பு நிதி ஆண்டில் இதுவரை நெல் 2,315 ஹெக்டேரிலும், சிறுதானியங்கள் 3,107 ஹெக்டேரிலும், எண்ணெய் வித்துகள் 667 ஹெக்டேரிலும், பருத்தி 1,054 ஹெக்டேரிலும், கரும்பு 1,367 ஹெக்டேர் பரப்பளவிலும் பயிரிடப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் மாந்தன் யோஜனா திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரையுள்ள சிறு, குறு விவசாயிகள் மட்டுமே சேர முடியும். விவசாயிகள் தங்கள் வயதுக்கேற்ப ரூ.55 முதல் ரூ.200 வரை உள்ள தொகையை 60 வயது வரை செலுத்த வேண்டும். 61-வது வயதில் இருந்து வாழ்நாள் வரை மாதந்தோறும் ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரம் கிடைக்கும்.

நெல்லை மாவட்டத்தில் 529 உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்கள் உள்ளன. அந்த விற்பனை நிலையங்களில் இருந்து 827 விதை மாதிரிகள் எடுக்கப்பட்டு, ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன. இதில் 11 மாதிரிகள் தரமற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 10 விதை விற்பனை உரிமையாளர்கள் மீது துறை நடவடிக்கையும், ஒரு விதை விற்பனையாளர் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது.

ஆய்வின்போது தரக்குறைவான விதைகள் 8.53 மெட்ரிக் டன் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அந்த விதைகளை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன் மதிப்பு ரூ.4 லட்சத்து 99 ஆயிரம் ஆகும்.

பாபநாசம் அணையில் இருந்து கடந்த 21-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து 20 நாட்கள் தண்ணீர் திறந்து விடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் விவசாயிகள், பயிர் காப்பீட்டு திட்டத்தில் இழப்பீடு முறையாக வழங்கப்படவில்லை. ஒவ்வொரு முறையும் கேட்கும்போதும், அதிகாரிகள் சரியாக பதில் சொல்வது இல்லை. எங்களுக்கு கடந்த ஆண்டுக்கான காப்பீட்டு தொகை உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அதற்கு பதிலளித்த மாவட்ட வருவாய் அலுவலர், இதுவரை எத்தனை கோடி ரூபாய் பயிர் காப்பீடு தொகை வாங்கிக்கொண்டு இருக்கிறோம் என்று உங்களுக்கு தெரியும். விரைவில் காப்பீடு தொகை வாங்கி தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கார் சாகுபடி பொய்த்து விட்டது, அதனால் நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்கு, இதுபற்றி அரசுக்கு கடிதம் எழுதுவோம் என்று வருவாய் அலுவலர் பதில் அளித்தார்.

திசையன்விளை, ராதாபுரம் ஆகிய தாலுகாக்களை சேர்ந்த விவசாயிகள், வருவாய் அலுவலரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், திசையன்விளை தாலுகா தருவைகுளம் உள்ளிட்ட பல குளங்கள் தூர்வாரப்படாமல் இருக்கிறது. அந்த குளங்களை தூர்வார வேண்டும். எங்கள் பகுதியில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. அந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

கூட்டத்தில் உதவி கலெக்டர்கள் ஆகாஷ் (சேரன்மாதேவி), மணிஷ் நாரணவரே (நெல்லை), ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, பயிற்சி கலெக்டர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சத்யஜோஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story