பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல், பழனி முருகன் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு - சோதனைக்கு பின் பக்தர்கள் அனுமதி
தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை கொடுத்த தகவலை தொடர்ந்து பழனி முருகன் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீவிர சோதனைக்கு பின்னரே கோவிலுக்குள் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
பழனி,
நாடு முழுவதும் வருகிற 2-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு இந்து அமைப்புகள் சார்பில் ஆங்காங்கே விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். இந்நிலையில் தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தில் நாச வேலைகள் செய்ய பயங்கரவாதிகள் 6 பேர் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை அதிகாரிகள் மாநில டி.ஜி.பி.க்கு சுற்றறிக்கை அனுப்பினர். இந்த பயங்கரவாதிகள் கோவையில் ஊடுருவியதாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நேற்று முதல் சென்னை, கோவை உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான பழனி முருகன் கோவிலிலும் பயங்கரவாதிகள் ஊடுருவல் தகவல் எதிரொலியாக நேற்று மாலை முதல் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவிலுக்கு செல்லும் படிப்பாதை, மின்இழுவை ரெயில்நிலையம் ஆகிய இடங்களில் மெட்டல் டிடெக் டர் மூலம் ஆண், பெண் பக்தர்கள் என தனித்தனியாக தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
அதேபோல் பக்தர்கள் கொண்டு வரும் உடைமைகளையும் சோதனை செய்ய பிரத்யேக ஸ்கேனர் திண்டுக்கல்லில் இருந்து கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் பக்தர்களின் உடைமைகள் ஸ்கேன் செய்யப்படுகின்றன. இதற்கிடையே பழனி கோவிலின் பிரதான நுழைவு பகுதியான படிப்பாதை பகுதியில் பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன் வந்து ஆய்வு செய்தார். பின்னர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இது குறித்து அவர் கூறும் போது பழனி டிவிசனுக்கு உட்பட்ட சத்திரப்பட்டி, ஆயக் குடி, பாலசமுத்திரம், தொப்பம்பட்டி, சாமிநாதபுரம் உள்பட 7 இடங்களில் உள்ள சோதனை சாவடிகளில் அந்தந்த சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் வாகனங்கள் சோதனை செய்யப்படுகின்றன.
மேலும் பழனியில் உள்ள பஸ்நிலையம், ரெயில்நிலையம், மார்க்கெட் உள்ளிட்ட இடங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பழனி கோவிலில் மட்டும் கூடுதலாக 25-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் திண்டுக்கல்லில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட உள்ளது என்றார்.
Related Tags :
Next Story