மதுரையில் அப்பள கம்பெனியில் புகுந்து திருடிய பொருட்கள் விவரத்தை பட்டியல் போட்டு சுவரில் எழுதிய கொள்ளையர்கள்


மதுரையில் அப்பள கம்பெனியில் புகுந்து திருடிய பொருட்கள் விவரத்தை பட்டியல் போட்டு சுவரில் எழுதிய கொள்ளையர்கள்
x
தினத்தந்தி 25 Aug 2019 4:30 AM IST (Updated: 25 Aug 2019 12:55 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் அப்பள கம்பெனியில் திருடிய பொருட்களின் விவரங்களை கொள்ளையர்கள் அங்குள்ள சுவர், கதவில் பட்டியலிட்டு எழுதிவிட்டு, சாக்குமூடைகளில் கட்டி அள்ளிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை,

மதுரை தல்லாகுளம் மருதுபாண்டியர் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருக்கு சொந்தமான அப்பள கம்பெனி கோமதிபுரம் பகுதியில் ஒரு வீட்டில் இயங்கி வந்தது. நேற்றுமுன்தினம் இரவு வழக்கம்போல் பாலசுப்பிரமணியன் தனது கம்பெனியை பூட்டி விட்டு சென்றார். இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள், இரவில் கதவை திறந்து உள்ளே புகுந்து கம்பெனியில் இருந்த கணினி, தராசு, எடைகற்கள், அப்பளம் தயாரிக்கும் எந்திரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை திருடினர்.

இந்தநிலையில் நேற்று காலை கம்பெனியை திறக்க வந்த பாலசுப்பிரமணியன், கதவு திறக்கப்பட்டு பொருட்கள் அனைத்தும் திருட்டுப் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் கம்பெனியின் சுவரில் குறிப்பிட்ட அடையாளத்தை கொள்ளையர்கள் வரைந்ததுடன், எந்தெந்த பொருட்களை அப்பள கம்பெனியில் இருந்து கொள்ளையடித்தோம் என்ற தகவலை பட்டியலிட்டுவிட்டு, அடையாளத்துக்கு சில ஆங்கில வார்த்தைகளை சுவர் மற்றும் கதவுகளில் எழுதிச் சென்றது தெரியவந்தது.

உடனே இதுகுறித்து பாலசுப்பிரமணியன், அண்ணாநகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் அந்த கம்பெனிக்கு சென்று சோதனையிட்டனர். விசாரணையும் நடத்தினர்.

இதுதவிர கொள்ளையர்கள் விட்டுச் சென்ற தடயங்களையும் சேகரித்தனர். மேலும் கம்பெனியின் அருகே பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, அதில் மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள், சாக்கு மூடைகளில் பொருட்களை திருடிச் சென்றது பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் கொள்ளையார்கள் யார்-யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

அப்பள கம்பெனியில் திருடிய பொருட்களை பட்டியலிட்டு, கதவில் எழுதி வைத்துச் சென்ற கொள்ளையர்களின் செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே கம்பெனியில் பணம் திருட்டுபோனதாகவும், ஆனால் அதுகுறித்து புகார் ஏதும் அளிக்கப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
1 More update

Next Story