போலீஸ் பணிக்கான எழுத்துத்தேர்வு இன்று நடக்கிறது ; மையத்திற்குள் செல்போனுக்கு தடை-சூப்பிரண்டு அருளரசு தகவல்


போலீஸ் பணிக்கான எழுத்துத்தேர்வு இன்று நடக்கிறது ; மையத்திற்குள் செல்போனுக்கு தடை-சூப்பிரண்டு அருளரசு தகவல்
x
தினத்தந்தி 25 Aug 2019 4:00 AM IST (Updated: 25 Aug 2019 1:49 AM IST)
t-max-icont-min-icon

திருச்செங்கோட்டில் இன்று நடைபெற உள்ள போலீஸ் மற்றும் தீயணைப்புப்படை வீரர்கள் சேர்க்கைக்கான எழுத்துத்தேர்வு மையத்திற்குள் செல்போன் கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டு இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு அருளரசு தெரிவித்துள்ளார்.

நாமக்கல்,

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 2-ம் நிலை காவலர், சிறை காவலர் மற்றும் தீயணைப்புப்படை வீரர்கள் சேர்க்கைக்கான எழுத்துத்தேர்வு நாமக்கல் மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிமுதல் 11.20 மணி வரை திருச்செங்கோடு அருகே எளையாம்பாளையம் விவேகானந்தா கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுத 4 ஆயிரத்து 88 ஆண்கள், 475 பெண்கள் என மொத்தம் 4 ஆயிரத்து 563 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இத்தேர்விற்கு வரும் விண்ணப்பதாரர் புகைப்படம், பெயர் விவரங்களுடன் கூடிய பதிவிறக்கம் செய்யப்பட்ட சென்னை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை கொண்டு வரவேண்டும். விண்ணப்பதாரர் தேர்வுக்கூட நுழைவு சீட்டில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வுவெழுத அனுமதிக்கப்படுவர்.

நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்யஇயலாத விண்ணப்பதாரர்கள், விண்ணப்பம் செய்தபோது பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் புகைப்படத்துடன் வந்தால் பரிசீலனை செய்யப்படும். தேர்வு மையத்தில் மாற்றம் ஏதும் செய்யஇயலாது. விண்ணப்பதாரர் புகைப்படத்துடன் கூடிய வேறு அடையாள அட்டை ஏதும் இருப்பின் அவற்றின் நகலை கொண்டு வரலாம். செல்போன், டிஜிட்டல் கைகெடிகாரம் மற்றும் கால்குலேட்டர் போன்ற எலக்ட்ரானிக் கருவிகள் தேர்வு எழுதும் அறைக்குள் தடை விதிக்கப்பட்டு உள்ளது . தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டால் தகுதி நீக்கம் செய்யப்படும்.

விண்ணப்பதாரர் தேர்வு மையத்தில் காலை 9 மணிக்குள் தேர்வெழுத அறிக்கை செய்துகொள்ள வேண்டும். தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி 11.20 மணி வரை நடைபெறும். தேர்வு தொடங்கிய பின் காலை 10.15 மணிக்கு பிறகு விண்ணப்பதாரர் தேர்வு அறைக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்.

தேர்வு நேரத்தில் விண்ணப்பதாரர் அறையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கபடமாட்டார். தேர்வு எழுதும்போது பேசவோ, சைகை செய்யவோ கூடாது. மேலும் விண்ணப்பதாரர் வாகனத்தில் வந்தால், வாகனத்தை தேர்வு மையத்திற்கு வெளியே அவரின் சொந்த பொறுப்பில் நிறுத்திக்கொள்ள வேண்டும். தேர்வு மையத்தில் நிறுத்த அனுமதியில்லை. இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Next Story