டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை நிறுத்திவிட்டு பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க வேண்டும்


டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை நிறுத்திவிட்டு பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க வேண்டும்
x
தினத்தந்தி 26 Aug 2019 4:30 AM IST (Updated: 26 Aug 2019 12:52 AM IST)
t-max-icont-min-icon

டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை நிறுத்தி விட்டு பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.

தஞ்சாவூர்,

டெல்டா மாவட்டங்களில் கடந்த 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடி இல்லை. கடும் வறட்சி நிலவி வருகிறது. கடந்த 1½ ஆண்டுகளாக ஏரி, குளங்களை தூர்வார வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் நிறைவேற்றப்பட வில்லை. தற்போது பணிகளை தொடங்கி வருகிற 31-ந்தேதிக்குள் முடிப்பதாக தெரிவித்துள்ளனர். அவசரமாக கரைகளை பலப்படுத்தும் பணிகளை மேற்கொண்டுள்ளனர். மேட்டூரில் இருந்து 20 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்தால் தான் கடைமடை பகுதிக்கு சென்றடையும்.

நிறுத்த வேண்டும்

தூர்வாரும் பணிகளை அவசர கதியில் மேற்கொள்வது பொய் கணக்கு எழுதத்தான். இதை வன்மையாக கண்டிக்கிறேன். இதில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை பயன்படுத்த வேண்டும். ஆனால் அரசியல் வாதிகள், காண்டிராக்டர்கள் கொள்ளையடிக்கத்தான் இந்த திட்டம் பயன்படுத்தப்படுகிறது. தூர்வாரும் பணிகளால் பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்காததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை உடனே நிறுத்தி விட்டு பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க வேண்டும்.

முதல்-அமைச்சர் வெளிநாடு செல்லும் போது அவர் பணிகளை வேறு அமைச்சரிடம் ஒப்படைப்பது வழக்கம். ஆனால் யார் மீதும் நம்பிக்கை இல்லாததால் அவர் பொறுப்புகளை ஒப்படைக்கவில்லையா? என்ற சந்தேகம் எழுகிறது. வெளிநாட்டு மூலதனத்தை தமிழகத்துக்கு கொண்டு வருவதற்காக செல்கிறார் என்கிறார்கள். வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு மூடுவிழா நோக்கி செல்லும் போது எப்படி வெளிநாட்டு மூலதனத்தை இங்கு கொண்டுவரப்போகிறார் என தெரியவில்லை.

சலுகைகள்

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏற்கனவே சலுகைகள் அளித்துள்ள போது மீண்டும் சலுகைகளை மத்திய மந்திரி நிர்மலாசீதாராமன் அறிவித்துள்ளார். விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி அளிக்கவில்லை. விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு, குறு தொழிலாளர்கள் யாருக்கும் சலுகைகள் அளிக்கப்படவில்லை. ரெயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாகி வருகிறது. தற்போது மேட்டூர் பகுதியில் ஏரிகளை உருவாக்கி தண்ணீர் சேமிக்கும் போது, டெல்டா பாசனம் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட செயலாளர் நீலமேகம், மாநகர செயலாளர் குருசாமி, விவசாய சங்க மாவட்ட தலைவர் கண்ணன், முன்னாள் மாவட்ட செயலாளர் மனோகரன், முன்னாள் நகர செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story