கோவையில், போலீஸ் வேலைக்கான எழுத்துதேர்வை 4,249 பேர் எழுதினார்கள்
கோவையில் நடந்த போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வை 4,249 பேர் எழுதினார்கள்.
கோவை,
தமிழகத்தில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறைத்துறைகளில் காலிப்பணியிடங்கள் அதிகளவில் உள்ளன. இந்த காலிப்பணி யிடங்களை நிரப்ப, ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு நேற்று தமிழகம் முழுவதும் எழுத்துத்தேர்வு நடந்தது.
கோவை மாவட்டத்தில் போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வை எழுத மொத்தம் 5 ஆயிரத்து 441 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதில் 639 பேர் பெண்கள். கோவையில் பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி, என்.ஜி.பி. கல்லூரி, ராமகிருஷ்ணா கல்லூரி மற்றும் இந்துஸ்தான் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
காலை 10 மணி முதல் 11.30 மணி வரை தேர்வு நடந்தது.தேர்வு எழுத வந்தவர்கள் காலை 9 மணிக்கு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட் டனர். செல்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் எதுவும் உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. நுழைவு சீட்டு மற்றும் அரசு அங்கீகரிக்கும் ஏதாவது ஒரு அடையாள அட்டை ஆகியவை இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
சரியாக காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. இதில் விண்ணப்பித்தவர்கள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் எழுதினார்கள். இந்த தேர்வை மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா, கோவை சரக டி.ஐ.ஜி. கார்த்திகேயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அனிதா மற்றும் போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டனர். மேலும் அங்கு செய்யப்பட்டு இருந்த ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தனர்.
கோவை மாவட்டத்தில் போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வை 4 ஆயிரத்து 249 பேர் எழுதினார்கள். 128 பெண்கள் உள்பட 1,192 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்கள்தான் பின்னர் உடல் திறனாய்வு தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் என்று போலீஸ் உயர் அதிகாரிகள் கூறினார்கள்.
Related Tags :
Next Story