லால்குடியில் வாய்க்கால்களை தூர்வாரக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகம் முற்றுகை


லால்குடியில் வாய்க்கால்களை தூர்வாரக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 27 Aug 2019 4:30 AM IST (Updated: 27 Aug 2019 1:27 AM IST)
t-max-icont-min-icon

லால்குடியில் வாய்க் கால்களை தூர்வார கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

லால்குடி,

லால்குடியில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் விசுவநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் சுப்பிரமணியன், லால்குடி ஒன்றிய தலைவர் ராமலிங்கம், சிறுமயங்குடி கிளை தலைவர் வீரமணி, ஒன்றிய செயற்குழு உறுப்பினர் செல்வம் ஆகியோர் பேசினர்.

லால்குடி அருகே மேட்டுப்பட்டி பகுதியில் உள்ள பங்குனி வாய்க்காலில் இருந்து பிரியும் பெட்டவாய்த்தலை கிளை வாய்க்காலை 500 மீட்டருக்கு தூர்வார வேண்டும். அதேபோல் சிறுமயங்குடி பகுதியில் உள்ள பெருவளை வாய்க்காலில் ராமநாதபுரம் கருப்பு கோவிலில் இருந்து சிறுமயங்குடி வரை உள்ள கிளை வாய்க்காலை தூர்வார வேண்டும். ராமநாதபுரம் குமிழி வாய்க்காலில் இரட்டை குமிழியில் இருந்து புளியமரம் வரை தடுப்புச்சுவர் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

நடவடிக்கை இல்லை

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த 7-ந் தேதி லால்குடி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி, தாசில்தார் சத்தியபாலகங்காதரனிடம் மனு கொடுத்தோம். ஆனால் இதுவரை வாய்க் கால்களை தூர்வார நடவடிக்கை இல்லை. இதனால் தற்போது முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்று கூறினர். மேலும் கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர்.

இது குறித்து தகவல் அறிந்த லால்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதையடுத்து கோரிக்கை தொடர்பாக பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஜெயராமனிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அவர், வாய்க்கால்களை பார்வையிட்டு ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். போராட்டத்தில் விவசாய சங்க நிர்வாகிகள் துரைராஜ், சகாயராஜ், திருநீர்குமார், மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story