ஈரோடு மாவட்டத்தில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு


ஈரோடு மாவட்டத்தில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு
x
தினத்தந்தி 27 Aug 2019 11:15 PM GMT (Updated: 27 Aug 2019 6:37 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு நடத்தியது.

ஈரோடு,

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு எஸ்.செம்மலை எம்.எல்.ஏ. தலைமையில் அமைக்கப்பட்டு உள்ளது. 18 எம்.எல்.ஏ.க்களை உறுப்பினர்களாக கொண்ட இந்த குழுவினர் பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி நேற்று இந்த குழுவினர் ஈரோடு வந்தனர்.

குழு தலைவர் எஸ்.செம்மலை எம்.எல்.ஏ. தலைமையில் உறுப்பினர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ. (தி.மு.க.), எஸ்.ஈஸ்வரன் (அ.தி.மு.க.), கோவி.செழியன் (தி.மு.க.), அ.சண்முகம்(அ.தி.மு.க.), அ.நல்லதம்பி (தி.மு.க.) ஆகியோர் நேற்று ஈரோடு மாவட்டத்தில் ஆய்வுப்பணியில் ஈடுபட்டனர். ஈரோடு காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

அவர்கள் ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனைக்கு சென்றனர். அங்கு பயன்படுத்தப்பட்ட தண்ணீர் மற்றும் எண்ணை ஆகியவை சுற்றுப்புற மாசு ஏற்படாத வகையில் சுத்திகரிக்கப்படுவதை பார்வையிட்டனர். அதுபற்றி பேரவை பொது நிறுவனங்கள் குழு எம்.எல்.ஏ.க்கள் அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தனர். மேலும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பணிமனைகளின் நிலைகள், ஒவ்வொரு பணிமனையிலும் செய்யப்பட்டு உள்ள சுகாதாரப்பணிகள் குறித்தும் அவர்கள் அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தனர். போக்குவரத்துக்கழக டிரைவர் பாலகிருஷ்ணன் என்பவரை அழைத்து டிரைவர்கள் பஸ் ஓட்டிவிட்டு பணி மாற்றம் செய்யும்போது, பஸ்சில் உள்ள குறைபாடுகள் குறித்து அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படுகிறதா? என்று கேட்டு அறிந்தார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் அன்பு ஆபிரகாம், ஈரோடு மண்டல பொதுமேலாளர் மகேந்திரகுமார் ஆகியோர் விளக்கம் அளித்தனர். பணிமனை செயல்பாடுகளை கேட்டு அறிந்த எம்.எல்.ஏ.க்கள் குழுவினர் பவானி அருகே உள்ள ஊராட்சிக்கோட்டை பகுதிக்கு சென்று ஈரோடு மாநகராட்சி தனிக்குடிநீர் திட்டப்பணிகளை பார்வையிட்டனர்.

அங்கிருந்து புறப்பட்ட அவர்கள் பண்ணாரி மாரியம்மன் கோவில் சென்றனர். அங்கு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.

பவானிசாகர் அணைக்கட்டுக்கு சென்ற எம்.எல்.ஏ.க்கள் குழுவினர் அங்கு தண்ணீர் அளவீடு செய்யும் அறையில் சென்று பார்வையிட்டனர். மேலும், அணையின் தற்போதைய நீர்மட்டம், பரப்பளவு ஆகியவற்றை கேட்டு அறிந்தனர்.

பவானிசாகர் அணைக்கட்டில் உள்ள புனல் மின்நிலையத்தை எம்.எல்.ஏ.க்கள் குழுவினர் பார்வையிட்டனர். மின்நிலையத்தின் செயல்பாடு மற்றும் மின் உற்பத்தி திறன் ஆகியவற்றையும் அவர்கள் கேட்டு அறிந்தனர்.

பவானிசாகர் பகுதியில் அணைக்கட்டு, மீன் வளத்துறை மீன் குஞ்சு பொரிப்பகம் மற்றும் ஆராய்ச்சி மையம், போக்குவரத்துக்கழக ஓட்டுனர் பயிற்சிப்பள்ளி, புலன் மின்நிலையத்தை பார்வையிட்ட சட்டமன்ற பேரவை பொதுநிறுவனங்கள் குழு தலைவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பவானிசாகர் அணையில் தற்போது தண்ணீர் நல்ல நிலையில் உள்ளது. எனவே புனல் மின்நிலையத்தில் மின்சார உற்பத்தி தொடங்கப்பட்டு இருக்கிறது. இங்கு 2 மெகாவாட் உற்பத்தி செய்யும் 4 அலகுகள் இயங்குகின்றன. 4 மெகாவாட் உற்பத்தி செய்யும் அலகுகள் இயங்கவில்லை. அதில் முக்கிய உதிரிபாகம் பழுதடைந்து விட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, உதிரிபாகம் வாங்க ஒப்பந்தம் பெறப்பட்டு இன்னும் 10 நாட்களில் வாங்கப்படும். 2 மாதங்களில் பணிகள் நிறைவு செய்து அந்த அலகுகளிலும் மின்உற்பத்தி செய்யப்படும் என்றனர். ஆனால், தாமதப்படுத்தாமல் ஒரே மாதத்தில் பணிகளை முடிக்க கூறி இருக்கிறோம். மற்றபடி நிலையம் நல்ல முறையில் இயங்குகிறது.

பவானிசாகர் அணைக்கட்டின் முன்பகுதியில் உள்ள பாலம், அணை கட்டும் பணிகள் நடந்தபோது கட்டப்பட்டது. இப்போது பழுது அடைந்து விட்டது. அந்த பாலத்தை கடந்து 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் செல்வதால், உடனடியாக பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக ரூ.7 கோடியே 75 லட்சம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இன்னும் 15 நாட்களில் புதிய பாலம் கட்டும் பணிகள் தொடங்கும்.

இவ்வாறு எஸ்.செம்மலை எம்.எல்.ஏ. கூறினார்.

பின்னர் அவர் பவானிசாகர் தொகுதியில் செய்யப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டம், பாலம் பணிகளையும் பார்வையிட்டனர்.

இந்த நிகழ்வுகளில் கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ., மண்டலக்குழு முன்னாள் தலைவர் ரா.மனோகரன், போக்குவரத்துக்கழக தொழிற்சங்க பொறுப்பாளர் ஜீவாரவி, மீன்வளத்துறை பவானிசாகர் ஆராய்ச்சிப்பண்ணை துணை இயக்குனர் சர்மிளா, தாசில்தார் கார்த்திக் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் வந்தனர்.

இன்று (புதன்கிழமை) 2-வது நாள் ஆய்வு நடக்கிறது. ஈரோடு அரசு ஆஸ்பத்திரி, பெருந்துறை சிப்காட் வளாகம் ஆகியவற்றை எம்.எல்.ஏ.க்கள் குழுவினர் பார்வையிடுகிறார்கள். பிற்பகல் 3 மணிக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சிமன்ற கூட்ட அரங்கில் அனைத்து துறை ஆய்வுக்கூட்டம் நடக்கிறது.

Next Story