கட்டணம் செலுத்த மறுத்து தகராறு, சுங்கச்சாவடியில் துப்பாக்கி சூடு நடத்திய வாலிபர் கைது


கட்டணம் செலுத்த மறுத்து தகராறு, சுங்கச்சாவடியில் துப்பாக்கி சூடு நடத்திய வாலிபர் கைது
x
தினத்தந்தி 29 Aug 2019 11:15 PM GMT (Updated: 29 Aug 2019 7:43 PM GMT)

மதுரை அருகே சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த மறுத்து வாலிபர் துப்பாக்கியால் சுட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரும், காரில் தப்பிய மேலும் 5 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 4 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மதுரை,

மதுரை அருகே திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடியில் நேற்று மதியம் 1 மணி அளவில் பல வாகனங்கள் நிறுத்தப்பட்டு, கட்டணம் வசூலிக்கப்பட்டது. அங்குள்ள 5-வது வசூல் மையத்துக்கு வந்த ஒரு காரில் மொத்தம் 6 பேர் இருந்தனர்.

அந்த காரை நிறுத்தி சுங்கச்சாவடி ஊழியர் கட்டணம் கேட்டுள்ளார். அதற்கு அந்த காரில் வந்தவர்கள் பணம் கொடுக்க முடியாது என மறுத்துள்ளனர். பதிலுக்கு ஊழியர் இந்தி மொழியில் ஏதோ கூற அதற்கு, “நாங்கள் தமிழகத்திற்குள்தான் இருக்கிறோம், எங்களிடம் ஏன் வட மாநிலத்தை சேர்ந்த நீ பணம் வாங்க வேண்டும்” என்று கூறி தகராறு செய்தனர்.

பின்னர் காரில் வந்தவர்கள் பணம் கொடுக்காமல் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். அப்போது அவர்களுக்கும், அவர்களை மறித்த சுங்கச்சாவடி ஊழியருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதில், காரில் இருந்த 6 பேரும் இறங்கி, அந்த ஊழியரை சரமாரியாக தாக்கினர். இதில் நிலைகுலைந்து அவர் கீழே விழுந்தார்.

இதனை தொடர்ந்து 6 பேரும் அவசரம் அவசரமாக காரில் ஏறி தப்ப முயற்சித்தனர். அதில் ஒருவர் மட்டும் காரில் ஏறவில்லை. மற்ற 5 பேரும் காரில் ஏறியதும் கார் அசுர வேகத்தில் பறந்தது. ஆனால், கீழே நின்றவர் காரில் ஏறுவதற்காக பின்தொடர்ந்து ஓடினார். ஆனால், அவரால் காரில் ஏறமுடியவில்லை.

இந்த சம்பவங்களை கண்ட மற்ற ஊழியர்கள் அனைவரும் திரண்டு அந்த நபரை விரட்டினர். சுங்கச்சாவடி ஊழியர்களும், அந்த பகுதியை சேர்ந்தவர்களும் சற்று தூரத்தில் சுற்றி வளைத்து அந்த நபரை பிடித்து அடித்து உதைத்தனர்.

அந்த நபர் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து அங்கிருந்தவர்களை மிரட்டினார்.

திடீர் என்று அவர் வானத்தை நோக்கி 2 முறையும், தரையை நோக்கி இரு முறையும் துப்பாக்கியால் சுட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருந்தாலும் சிலர் சுதாரித்துக் கொண்டு அந்த நபரிடம் இருந்த கைத்துப்பாக்கியை லாவகமாக பறித்தனர். அந்த நபர் சுட்டதில் அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பிடிபட்ட நபர் உடனடியாக திருமங்கலம் டவுன் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அந்த துப்பாக்கியும் ஒப்படைக்கப்பட்டது. அவரை போலீசார் கைது செய்தனர்.

போலீசார் அந்த நபரிடம் நடத்திய விசாரணையில், அவர் திருச்சி அருகே உள்ள அரியமங்கலம் பகுதியை சேர்ந்த சசிகுமார் (வயது 28) என தெரியவந்தது. அவருடன் காரில் வந்தது மதுரை நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த ரகுபதி, பெரம்பலூரை சேர்ந்த கார்த்திகேயன், சென்னை எண்ணூரை சேர்ந்த தனசேகரன், வியாசர்பாடியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன், வேலூரை சேர்ந்த ராஜா என்ற வசூல்ராஜா என தெரியவந்தது. அவர்கள் 5 பேர் சென்ற கார் எண்ணை தெரிவித்து அடுத்தடுத்த சோதனை சாவடிகளிலும், மதுரையில் இருந்து செல்லும் முக்கிய சாலைகளிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

இந்த நடவடிக்கையால் சற்று நேரத்தில் அந்த 5 பேரும் போலீசாரிடம் பிடிபட்டனர். அதாவது, காரில் தப்பியவர்கள் மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகே காரை நிறுத்திவிட்டு, போலீசாரின் கவனத்தை திசை திருப்பும் வகையில் ஆட்டோவில் ஏறி சென்றுள்ளனர். ஆனால் இதை கண்டுபிடித்த போலீசார் அவர்களை பின்தொடர்ந்தனர். வாலாந்தூர் கண்மாய் அருகே சென்ற போது ஆட்டோவை நிறுத்திவிட்டு 5 பேரும் கண்மாய்க்குள் இறங்கி தப்பி ஓட முயன்றனர். போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்த மேலும் 3 கைத்துப்பாக்கிகளையும், 15 தோட்டாக்களையும் கைப்பற்றினர். பின்னர் அவர்களையும் திருமங்கலம் டவுன் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் விரைந்து வந்து கைதான 6 பேரிடமும் விசாரணை நடத்தினார். மேலும், கப்பலூர் சுங்கச்சாவடி ஊழியர்களிடமும் நடந்தது குறித்து கேட்டறிந்தார்.

மதுரை சுங்கச்சாவடியில் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்து துப்பாக்கியால் சுட்ட சம்பவமும், கண்மாய்க்குள் துப்பாக்கியுடன் ஓடியவர்களை போலீசார் விரட்டி பிடித்த சம்பவமும் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story