தேனியில், வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.1½ லட்சம் மோசடி - பெண்ணுக்கு வலைவீச்சு
தேனியில் உள்ள வங்கியில் போலி நகையை அடகு வைத்து ரூ.1½ லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தேனி,
தேனி பழைய அரசு மருத்துவமனை சாலையில் உள்ள வ.உ.சி. தெருவை சேர்ந்த வேல்முருகன் மனைவி கற்பகசெல்வி (வயது 49). இவர், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தேனி நகர் பெரியகுளம் சாலையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் நகைகள் அடகு வைக்க சென்றார்.
அப்போது அந்த வங்கியில் புதிதாக வங்கி கணக்கு தொடங்கி, 10 பவுன் எடையுள்ள 8 வளையல்களை அடகு வைத்து, ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கடன் பெற்றார். கடன் பெற்று ஒரு வருடம் ஆகியும் அவர் வட்டி செலுத்தவில்லை. இதனால் அவருடைய முகவரிக்கு வங்கி நிர்வாகம் சார்பில், நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனாலும், அவர் நகையை திருப்ப முன்வரவில்லை.
பின்னர் வங்கி பணியாளர்கள், கற்பகசெல்வி வசித்த வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது அவர் வீட்டை காலி செய்து வேறு எங்கோ சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் அடகு வைத்த நகைகளை பரிசோதித்து பார்த்தபோது, அவை போலியானவை என்பது தெரியவந்தது.
இதுகுறித்து வங்கி மேலாளர் சுகந்தமலர், தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் செய்தார். இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் கற்பகசெல்வி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் விசாரணையில், அவர் ஏற்கனவே இதேபோல் மேலும் சில வங்கிகளில் போலி நகைகளை அடகு வைத்து பணம் மோசடி செய்து இருப்பதை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக அவர் மீது 2 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கற்பகசெல்வியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் அவரை வலைவீசி தீவிரமாக தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story