மாவட்டத்தில் 655 இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி


மாவட்டத்தில் 655 இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி
x
தினத்தந்தி 2 Sept 2019 3:00 AM IST (Updated: 2 Sept 2019 4:32 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் 655 இடங்களில் விநாயகர் சிலை வைக்க போலீசார் அனுமதி அளித்து உள்ளனர்.

நாமக்கல், 

விநாயகர் சதுர்த்தி விழா இன்று (திங்கட்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆங்காங்கே தெருக்கள், சாலையோரங்கள் மற்றும் வீடுகளில் பொதுமக்கள் சிலை வைத்து வழிபாடு நடத்துவார்கள். இந்த ஆண்டும் நாமக்கல் மாவட்டத்தில் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் 655 இடங்களில் சிலை வைத்து வழிபாடு நடத்த போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.

சிலை வைக்கும் நபர்கள் அரசு விதிமுறைகளின் படி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என போலீஸ் தரப்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போதும் விதிமுறைகளை மீறக்கூடாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நாமக்கல் நகரில் ஆங்காங்கே சாலையோரங்களில் விநாயகர் சிலைகள் விற்பனை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. பொதுமக்கள் ஆர்வமுடன் சிலைகளை வாங்கி செல்கின்றனர். இது குறித்து சிலை தயாரிப்பாளர் ஒருவர் கூறியதாவது:-

எங்களிடம் ½ அடி உயரம் முதல் 5 அடி உயரம் கொண்ட சிலைகள் வரை விற்பனைக்கு உள்ளன. இவை ரூ.50 முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. நாங்கள் களிமண்ணால் சிலைகளை செய்வதால், நீர்நிலைகள் மாசடைவது இல்லை. மேலும் ரசாயன வர்ணங்களையும் நாங்கள் பூசுவது இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story