ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வைகை தண்ணீரை தற்போது திறக்க வேண்டாம் - விவசாயிகள் வேண்டுகோள்


ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வைகை தண்ணீரை தற்போது திறக்க வேண்டாம் - விவசாயிகள் வேண்டுகோள்
x
தினத்தந்தி 4 Sep 2019 10:45 PM GMT (Updated: 4 Sep 2019 8:31 PM GMT)

விவசாய பணிகள் தொடங்காததாலும், வைகை அணையில் போதிய தண்ணீர் இல்லாததாலும் தற்போதைய நிலையில் ராம நாதபுரம் மாவட்டத்துக்கு வைகை தண்ணீர் திறக்க வேண்டாம் என்று ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரே நீர் ஆதாரம் வைகை தண்ணீரும், வடகிழக்கு பருவமழையும் தான். இந்த நீர் ஆதாரங்கள் ஒவ்வொரு முறையும் முறை வைத்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இந்த மக்களுக்கு கிடைத்து அதுவும் பயனில்லாமல் கடலில் கலந்து வீணாகி வரு கிறது. அந்த வகையில் கடந்த 3 ஆண்டுகளாக ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையும் பெய்யவில்லை, பாசனத்திற்காக வைகை தண்ணீரும் திறக்கப்படவில்லை. இதன்காரணமாக மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. நிலத்தடி நீர்ஆதாரங்கள் வற்றிவிட்டதால் மாற்று ஏற்பாடுகள் மூலம் மாவட்ட நிர்வாகம் குடிநீர் தேவையை சமாளித்து வருகிறது. இந்த நிலையில் வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும் ஒருசில விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். வைகை அணையில் இருந்து ஆண்டிப்பட்டி, திண்டுக்கல், மதுரை பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

வைகை அணையில் இருந்து முதல் உரிமையான ராமநாதபுரம் மாவட்டத்திற்குத்தான் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். முன்னுரிமை முதல் உரிமை என்று இருந்தாலும் தற்போதைய நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கவேண்டாம் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துக்கள் விவரம் வருமாறு:-

தமிழக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாநில துணை தலைவர் பாலசுந்தரமூர்த்தி கூறியதாவது:- வைகை அணையில் பெரியாறு அணை தண்ணீர், வைகை ஆயக்கட்டு தண்ணீர் என்ற 2 கணக்கு முறையில் தண்ணீர் உள்ளது. இதில் தற்போது கணக்கில் உள்ள தண்ணீரே மேற்கண்ட மாவட்டங்களுக்கு முதல் போகத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திற்கான கணக்கில் தண்ணீர் இன்னும் சேரவில்லை. ஏனெனில் வைகை ஆயக்கட்டு பகுதியில் போதிய மழை இன்னும் பெய்யவில்லை.

எனவே, இருக்கும் தண்ணீரை திறந்துவிட்டால் கடும் வறட்சியால் வறண்டுள்ள நிலத்தில் தண்ணீர் உறிஞ்சப்பட்டு ராமநாதபுரம் மாவட்ட எல்லையை கூட தொடமுடியாமல் போய்விடும். இதனால் தண்ணீர் திறந்தும் பயனில்லை. அதன் பின்னர் தேவைப்படும் போது தண்ணீர் கிடைக்காமல் போய் விடும். வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கிய பின்னர் ஓரளவு விவசாய பணிகள் நடந்துவரும் நிலையில் இனிமழை பெய்ய வாய்ப்பில்லை என்ற நிலையில் பாசனத்திற்கு தண்ணீர் தேவைப்படும்போது திறந்துவிட்டால் தான் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் முத்து ராமு கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது எந்த பகுதியிலும் விவசாய பணிகள் தொடங்கவில்லை. மழைக்கான அறிகுறிகள் தெரிந்தால்தான் விவசாயிகள் பணிகளை தொடங்கும் முடிவில் உள்ளனர். எனவே தற்போதைய நிலையில் வைகை தண்ணீர் திறந்துவிட வேண்டிய அவசியம் இல்லை. மேலும், இதற்கான தண்ணீரும் வைகை அணையில் இல்லை. மூல வைகையில் மழையில்லாமல் உள்ளது. இந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழை நன்றாக பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தண்ணீர் தேவைப்படும்போது சூழ் நிலைக்கேற்ப திறந்துவிட வலியுறுத்த வேண்டும். அதற்கு முன்னதாக வைகை ஆற்று பகுதியில் வளர்ந்துள்ள காட்டு கருவேல மரங்களை அகற்றி வழியை சரிசெய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story