ரூ.4¾ கோடி பரிசுத்தொகை விழுந்ததாக கூறி ராணுவ வீரரிடம் நூதன முறையில் ரூ.6½ லட்சம் மோசடி


ரூ.4¾ கோடி பரிசுத்தொகை விழுந்ததாக கூறி ராணுவ வீரரிடம் நூதன முறையில் ரூ.6½ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 5 Sep 2019 10:15 PM GMT (Updated: 5 Sep 2019 8:26 PM GMT)

பன்னாட்டு கிரிக்கெட் கிளப் மூலம் ரூ.4¾ கோடி பரிசுத்தொகை விழுந்ததாக கூறி நூதனமுறையில் ராணுவவீரரிடம் ரூ.6½ லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

வேலூர்,

நாட்டறம்பள்ளியை அடுத்த சொரக்கல்நத்தம் கந்தன்நகரை சேர்ந்தவர் சஞ்சீவிமுருகன் (வயது 50), விவசாயி. இவரது மகன் செல்வக்குமார் புதுடெல்லியில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்வகுமாரின் செல்போன் எண்ணிற்கு அழைப்பு வந்தது.

அதில் பேசிய மர்மநபர், பன்னாட்டு கிரிக்கெட் கிளப்பில் இருந்து பேசுவதாகவும், “உங்கள் எண்ணுக்கு ரூ.4 கோடியே 85 லட்சத்து 50 ஆயிரம் பரிசுத்தொகை விழுந்துள்ளது அதை நீங்கள் பெற்றுக்கொள்ள பரிசுத்தொகைக்கு வரியாக ரூ.7 லட்சத்தை வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும். வரி பணத்தை செலுத்தியவுடன் பரிசுத்தொகை உங்கள் வங்கிக்கணக்கில் சேர்ந்து விடும்” என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செல்வகுமார் சொரக்கல்நத்தத்தில் உள்ள தனது தந்தை சஞ்சீவிமுருகனுக்கு போன் செய்து தனக்கு ரூ.4¾ கோடி பரிசு விழுந்திருப்பதாகவும், அதனை பெற்றுக்கொள்வதற்கு வங்கிக்கணக்கு எண் ஒன்றை கொடுத்து மேற்கண்ட எண்ணில் வங்கியில் ரூ.6 லட்சத்து 45 ஆயிரம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

ஆனால் சஞ்சீவிமுருகனிடம் அவ்வளவு பணம் இல்லை. எனவே அவர் தனக்கு தெரிந்த பல்வேறு நபர்களிடம் பணத்தை சேகரித்தார். இவ்வாறு சேகரித்த ரூ.6 லட்சத்து 45 ஆயிரத்தை 2 பகுதியாக பிரித்து திருப்பத்தூர் மற்றும் நாட்டறம்பள்ளியில் உள்ள வங்கிகள் மூலம் மகன் கொடுத்த கணக்கு எண்ணுக்கு அனுப்பினார். பணம் செலுத்தி பல நாட்களாகியும் செல்வகுமாரின் வங்கி கணக்கு எண்ணுக்கு ரூ.4¾ கோடி வரவில்லை.

உடனே அவர் தனக்கு பரிசு விழுந்ததாக கூறிய நபரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அந்த செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ ஆகியிருந்தது.

அதன்பின்னரே மர்மநபர் தங்களிடம் நூதன முறையில் ஏமாற்றி ரூ.6 லட்சத்து 45 ஆயிரத்தை பறித்தது தெரியவந்தது. இது குறித்து சஞ்சீவிமுருகன் நேற்று வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில் தங்களிடம் ரூ.6 லட்சத்து 45 ஆயிரத்தை ஏமாற்றிய நபரை கண்டறிந்து அவரிடம் இருந்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என கூறியிருந்தார். அது குறித்து நடவடிக்கை எடுப்பதாக சஞ்சீவிமுருகனிடம் போலீசார் கூறினர்.

மேலும் போலீசார் கூறுகையில் இதுபோன்று பல்வேறு இடங்களில் மோசடிகள் நடந்துள்ளதால் யாராவது இவ்வாறு பரிசு விழுந்ததாக கூறி வங்கிக்கணக்கிற்கு பணத்தை செலுத்த சொன்னால் ஏமாந்து விடாமல் போலீசாருக்கு தகவல் அளிக்க வேண்டும் என எச்சரித்திருந்தனர். ஆனால் இதனை பொருட்படுத்தாமல் அதிக பணம் கிடைக்கும். கோடீசுவரனாக ஆகலாம் என பலர் இவ்வாறு ஏமாந்து விடுகின்றனர். எனவே இனியாவது உஷாராக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

Next Story