“அரசு தூர்வாராத நீர்நிலைகளை தி.மு.க. இளைஞர் அணி சீரமைக்கும்” - மதுரையில் உதயநிதி ஸ்டாலின் பேட்டி


“அரசு தூர்வாராத நீர்நிலைகளை தி.மு.க. இளைஞர் அணி சீரமைக்கும்” - மதுரையில் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
x
தினத்தந்தி 7 Sep 2019 11:15 PM GMT (Updated: 7 Sep 2019 10:51 PM GMT)

அரசு தூர்வாராத நீர் நிலைகளை தி.மு.க. இளைஞர் அணி சீரமைக்கும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

மதுரை,

தி.மு.க. இளைஞர் அணியில் மதுரை மாநகர் மாவட்டம், நெல்லை மத்திய மாவட்டம் ஆகியவற்றில் நிர்வாகிகள் தேர்வுக்கான நேர்காணல் மதுரை பைபாஸ் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று நடந்தது. இளைஞர் அணி மாநில துணை செயலாளர் அசன் அலி ஜின்னா, மதுரை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் கோ.தளபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி நேர்காணல் நடத்தினார். அப்போது அவர் கட்சியில் ஆற்றிய பணி, மக்கள் பணி குறித்து கேள்விகள் கேட்டார். 200-க்கும் மேற்பட்டோர் இந்த நேர்காணலில் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் மதுரை நாராயணபுரம் சின்னப்புளியங்குளம் கண்மாயை பார்வையிட்டார். இந்த கண்மாய், மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது. இந்த கண்மாயை தி.மு.க. இளைஞர் அணியினர் தங்களது சொந்த முயற்சியில் தூர்வாரி உள்ளனர். மேலும் அங்கு மக்கள் நடை பயிற்சி மேற்கொள்வதற்கு வசதியாக நடைபாதை அமைக்கப்பட உள்ளது.

அந்த கண்மாயை பார்வையிட்ட பின்னர், உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-

நான் இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்றவுடன் சென்னையில் நடந்த இளைஞர் அணி ஆலோசனை கூட்டத்தில், அரசு தூர்வாராத கண்மாய், குளங்களை தி.மு.க. இளைஞர் அணியினர் சீரமைக்க வேண்டும் என்று கேட்டு கொண்டேன். அதனை ஏற்று மதுரையில் இந்த சின்னப்புளியங்குளம் கண்மாயை தூர்வாரி உள்ளனர். இது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 40 ஆயிரம் நீர்நிலைகள் உள்ளன. அதில் அரசு தூர்வாராத நீர்நிலைகளை தி.மு.க. இளைஞர் அணியினர் சீரமைப்பார்கள். இது இளைஞர்களுக்கு மிகுந்த ஊக்கமாக இருக்கும்.

வெளிநாட்டில் இருக்கும் முதல்-அமைச்சர், இங்கு வந்தவுடன்தான் எவ்வளவு முதலீடுகள் தமிழகத்தில் கிடைத்து இருக்கிறது என்று தெரியவரும். இருப்பினும் ஏற்கனவே நடத்திய உலக முதலீட்டாளர் மாநாட்டால் எந்த பலனும் ஏற்படவில்லை. அமைச்சர்கள் மற்றும் மாற்று கட்சியினர் எங்கள் இளைஞர் அணி மீது கூறும் அவதூறுகளுக்கு எங்களது தூர்வாரும் பணி போன்ற சமூக பணிகளே பதிலடியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ. பேசும் போது, “தி.மு.க. இளைஞரணியினர் இந்த கண்மாயை சீரமைத்து உள்ளனர். இங்கு மேலும் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.25 லட்சம் ஒதுக்கப்படும். மேலும் கடந்த காலத்தில் இந்த கண்மாய்க்கு, பெரியாறு பாசன கால்வாயில் இருந்து தண்ணீர் வரத்து இருந்தது. எனவே தற்போது வரத்துக்கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி மீண்டும் தண்ணீர் வர நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றார்.

இதில் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் ராஜா, மதன்குமார் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Next Story