கோபி அருகே பரிதாபம்: மினி வேன்–கார் நேருக்கு நேர் மோதல்- வாலிபர் பலி


கோபி அருகே பரிதாபம்: மினி வேன்–கார் நேருக்கு நேர் மோதல்- வாலிபர் பலி
x
தினத்தந்தி 8 Sep 2019 11:00 PM GMT (Updated: 8 Sep 2019 1:53 PM GMT)

கோபி அருகே மினி வேனும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

ஈரோடு

ஈரோடு மாவட்டம் கோபி அருகே டி.ஜி.புதூர் முனியப்பன் கோவில் பகுதியை சேர்ந்தவர் செல்லமுத்து. இவருக்கு பிரபு (வயது 22), நவீன் (19) என 2 மகன்கள் உள்ளனர். செல்லமுத்து அந்த பகுதியில் பெட்ரோல் பங்க வைத்து நடத்தி வருகிறார். இந்த பெட்ரோல் பங்கை செல்லமுத்துவின் மூத்த மகன் பிரபு, தற்போது நடத்தி வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் கோபியில் நடந்த உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக பிரபு சென்றார். பின்னர் திருமண நிகழ்ச்சியில் கலந்துவிட்டு மீண்டும் டி.ஜி.புதூர் நோக்கி காரில் வந்து கொண்டு இருந்தார். கோபி அருகே உள்ள அரக்கன்கோட்டை பகுதியில் சென்றபோது எதிரே வந்த மினி வேனும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் காருக்குள் இருந்த பிரபுவுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டதோடு உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் பங்களாப்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விபத்தில் இறந்த பிரபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய மின் வேன் டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள். விபத்தில் இறந்த பிரபுவின் உடலை பார்த்து அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

Next Story