கிளப்பில் பணம் வைத்து சூதாட்டம்: பிடிக்கச்சென்ற போலீஸ் அதிகாரிகளை கத்தியை காட்டி மிரட்டிய 17 பேர் கைது


கிளப்பில் பணம் வைத்து சூதாட்டம்: பிடிக்கச்சென்ற போலீஸ் அதிகாரிகளை கத்தியை காட்டி மிரட்டிய 17 பேர் கைது
x
தினத்தந்தி 8 Sep 2019 11:15 PM GMT (Updated: 8 Sep 2019 7:18 PM GMT)

திருப்பூரில் கிளப்பில் பணம் வைத்து சூதாடியவர்களை பிடிக்கச்சென்ற போலீஸ் அதிகாரிகளை கத்தியை காட்டி மிரட்டிய 17 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 7 இருசக்கர வாகனங்கள், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் பி.என்.ரோட்டில் குபேரன் ரெக்கிரியேசன் கிளப்பில் பணம் வைத்து சூதாடுவதாக திருப்பூர் மாநகர நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக நேற்று முன்தினம் இரவு வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கவேல், முருகேசன், போலீசார் ராமர், கணேசன், சிவாயரத்தினம், அன்பரசு ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சம்பந்தப்பட்ட கிளப்புக்கு சாதாரண உடையில் உள்ளே சென்றனர்.

அங்கு ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடுவது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றனர். அப்போது அங்கிருந்தவர்கள் போலீசாரை தாக்க முயன்றதுடன், கத்தியை காட்டி கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று அங்கிருந்த கும்பலை மடக்கி பிடித்து வடக்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

விசாரணையில் அவர்கள் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த குட்டி(வயது 29), கிளப் பொறுப்பாளர் மற்றும் திருப்பூரை சேர்ந்த சிவக்குமார்(35), ராதாகிருஷ்ணன்(31), ஞானவேல்(42), பிரபுராஜ்(33), அமுதராஜன்(36), ஹரீஷ்(36), பாலமுருகன்(21), சுரேஷ்பாபு(39), செல்வராஜ்(45), ராஜா(33), வரதராஜன்(30), சக்திவேல்(42), திருமூர்த்தி(48), சுப்பையா(42), சங்கர்(50), செல்வம்(52) என்பது தெரியவந்தது.

பிடிபட்டவர்கள் மீது பணம் வைத்து சூதாடியது, பிடிக்க சென்ற போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரை கத்தியை காட்டி மிரட்டல் விடுத்து தாக்க முயன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 17 பேரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.67 ஆயிரத்து 870, 7 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story