மாவட்ட செய்திகள்

கோலார் தங்கவயலில் சோகம்ஏரியில் மூழ்கி 6 சிறுவர்-சிறுமிகள் சாவு + "||" + Tragedy in the Kolar Gold Stage 6 children die in drowning in lake

கோலார் தங்கவயலில் சோகம்ஏரியில் மூழ்கி 6 சிறுவர்-சிறுமிகள் சாவு

கோலார் தங்கவயலில் சோகம்ஏரியில் மூழ்கி 6 சிறுவர்-சிறுமிகள் சாவு
கோலார் தங்கவயலில் ஏரியில் மூழ்கி 6 சிறுவர்-சிறுமிகள் உயிரிழந்தனர்.
கோலார் தங்கவயல்,

கோலார் தங்கவயலில் ஏரியில் மூழ்கி 6 சிறுவர்-சிறுமிகள் உயிரிழந்தனர். களிமண்ணில் விநாயகர் சிலை செய்து அதனை ஏரியில் கரைக்க சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சிறுவர்-சிறுமிகள்

கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் தாலுகா கேசம்பள்ளா அருகே மரதகட்டா கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் ரவி ரெட்டியின் மகள் வைஷ்ணவி (வயது 12), மகன் ரோகித் (10). ஜெயராமரெட்டியின் மகள்கள் தேஜாஸ்ரீ (11), ரக்‌ஷிதா (8). நாராயணசாமியின் மகன் தனுஷ் (10) மற்றும் ஆனந்த் என்பவரின் மகள் வீணா (8). இவர்கள் அனைவரும் அந்தப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் 6 சிறுவர்-சிறுமிகள் உள்பட 8 பேர் அந்தப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தனர். விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் தற்போது ஏரிகளில் கரைக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த சிறுவர்-சிறுமிகளும் விநாயகர் சிலையை செய்து, அதனை அந்தப்பகுதியில் உள்ள ஏரியில் கரைக்க முடிவு செய்தனர்.

ஏரியில் மூழ்கி தத்தளித்தனர்

அதன்படி நேற்று மாலை 4.30 மணிக்கு சிறுவர்-சிறுமிகள் 8 பேரும் ஏரியில் களிமண் எடுத்து விநாயகர் சிலை செய்தனர். அந்த சிலையை வைத்து வழிபட்டு, பின்னர் அந்த விநாயகர் சிலையை மரதகட்டா கிராமத்தில் ஊர்வலமாக கொண்டு சென்றனர். இதையடுத்து அந்த விநாயகர் சிலையை அங்குள்ள ஏரியில் கரைப்பதற்காக கொண்டு சென்றனர். அவர்கள் ஏரியில் இறங்கி களிமண்ணால் செய்யப்பட்ட சிலையை கரைக்க முயன்றனர். அந்த சமயத்தில் வைஷ்ணவி, ரோகித், தேஜாஸ்ரீ, ரக்‌ஷித், தனுஷ், வீணா ஆகிய 6 பேரும் ஏரியில் மூழ்கி தத்தளித்தனர்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற 2 பேரும், கிராமத்துக்கு ஓடிச்சென்று மக்களிடம் தகவலை தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்களும், சிறுவர்-சிறுமிகளின் பெற்றோர்களும் பதறி அடித்துக் கொண்டு ஏரியின் பகுதிக்கு சென்றனர். அப்போது ஏரியில் தத்தளித்து கொண்டிருந்த 6 பேரையும் மீட்க முயன்றனர்.

6 பேர் சாவு

ஆனால் அதற்குள் ஏரியில் மூழ்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் உயிருக்கு போராடிய மற்ற 3 பேரையும் மீட்டு கோலார் தங்கவயல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அந்த 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து ஏரியில் மூழ்கி பலியான வைஷ்ணவி, ரோகித், தேஜாஸ்ரீ, ரக்‌ஷித், தனுஷ், வீணா ஆகிய 6 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோலார் தங்கவயல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் கோலார் தங்கவயல் போலீஸ் சூப்பிரண்டு முகமது சுஜீதா சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் கோலார் தங்கவயல் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று பலியான குழந்தைகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

ஆஸ்பத்திரி முன்பு குவிந்தனர்

இதையடுத்து பிரேத பரிசோதனைக்கு பிறகு 6 பேரின் உடல்களும் அவர்களுடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களின் உடல்களை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். இது கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது. இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் மரதகட்டா கிராம மக்கள் அனைவரும் கோலார் தங்கவயல் அரசு ஆஸ்பத்திரி முன்பு குவிந்தனர்.

இதுகுறித்து ஆண்டர்சன்பேட்டை போலீசார் நடத்திய விசாரணையில், நேற்று பள்ளிக்கு விடுமுறை என்பதால், சிறுவர்-சிறுமிகள் களிமண்ணில் விநாயகர் சிலை செய்து அதனை ஏரியில் கரைக்க சென்றபோது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.

சோகம்

இதுகுறித்து ஆண்டர்சன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே கிராமத்தை சேர்ந்த 6 சிறுவர்-சிறுமிகள் ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.