அரசை விமர்சிக்காமல் இருந்தாலே போதும்: மு.க.ஸ்டாலின் பாராட்டு எங்களுக்குதேவையில்லை - கோவையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி


அரசை விமர்சிக்காமல் இருந்தாலே போதும்: மு.க.ஸ்டாலின் பாராட்டு எங்களுக்குதேவையில்லை - கோவையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 11 Sep 2019 11:00 PM GMT (Updated: 11 Sep 2019 7:33 PM GMT)

மு.க.ஸ்டாலின் பாராட்டு எங்களுக்கு தேவையில்லை. அவர் அரசை விமர்சிக்காமல் இருந்தாலே போதும் என்று கோவையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

கோவை,

14 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு தமிழகம் வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நேற்று முன்தினம் சேலம் சென்றார். அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், நேற்று இரவு கார் மூலம் கோவை வந்தார். சென்னை செல்வதற்கு முன்னதாக கோவை விமான நிலையத்தில் அவர் நிருபர் களிடம் கூறியதாவது:-

இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய வெளிநாட்டு பயணம் சென்றபோது அங்குள்ள தமிழ் சொந்தங்கள் அத்தனை பேரும், அன்போடு என்னை வரவேற்றனர். அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நான் திரும்பிய போது சென்னை மற்றும் கோவை விமான நிலையங்களில் எனக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய வெளிநாட்டு சுற்றுப்பயணம் குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்கும் மு.க.ஸ்டாலின் அவரது ஆட்சிக்காலத்தில் எத்தனை முறை வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார். எவ்வளவு வெளிநாட்டு முதலீடு ஈர்த்து உள்ளார். அவர் சொல்வது எல்லாம் பொய்யான செய்தி. தி.மு.க. ஆட்சி காலத்தில் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை ரூ.26 ஆயிரம் கோடி தான் தமிழகத்தில் தொழில் முதலீடு வந்தது.

ஆனால் ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் 2015-ம் ஆண்டில் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடி தொழில் முதலீட்டை ஈர்த்து, அதன் மூலம் ரூ.73 ஆயிரம் கோடிக்கு தொழில் தொடங்கப்பட்டுள்ளது. 67 நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கு முன்வந்துள்ளது. ஒரு புரிந்துணர்வு போட்டால் உடனே அந்த திட்டத்தை தொடங்கி விட முடியாது. அந்த தொழிற்சாலைக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்த வேண்டும். அதற்கான நிதி ஆதாரத்தை திரட்ட வேண்டும், முழு பணத்தை வைத்துக் கொண்டு தொழில் செய்ய முடியாது. வங்கியில் கடன்பெற்று தான் செய்ய முடியும். அதன்படி பெரிய தொழில் செய்ய வேண்டுமென்றால் 5 அல்லது 6 ஆண்டுகள் ஆகி விடும். சிறிய தொழில் தொடங்க வேண்டுமென்றால்கூட 2 அல்லது 3 ஆண்டுகள் ஆகும். அதுகூட தெரியாமல் எதிர்க்கட்சி தலைவர் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார். நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றது முதல் இன்று வரை எங்களை குறை சொல்வது தான் எதிர்க்கட்சி தலைவருக்கு வேலை.

தற்போதைய வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின்போது, தமிழகத்தில் சுமார் 8 ஆயிரத்து 895 கோடி ரூபாய் தொழில் முதலீடு செய்வதற்கு தொழில் அதிபர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர். 41 நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளன. புதிய முதலீடுகள் மூலம் 35 ஆயிரத்து 520 பேருக்கு வேலை கிடைக்கும். இப்படி ஒவ்வொரு மாநில முதல்-அமைச்சரும் வெளிநாடு பயணம் சென்று அந்தந்த மாநிலங்களில் தொழில் தொடங்க வேண்டும் என்று வெளிநாட்டினர் கோரிக்கை வைக்கிறார்கள்.

நான் வெளிநாடு சென்றபோது, கடந்த 40 ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்து எந்த ஒரு முதல்-அமைச்சரும் வெளிநாடு சுற்றுப்பயணம் செல்லவில்லை. அதனால் தமிழகத்தில் என்ன தொழில் தொடங்குவது என்பது எங்களுக்கு தெரியவில்லை என்று அங்குள்ளவர்கள் என்னிடம் தெரிவித்தனர். தற்போது நீங்கள் வந்திருக்கிறீர்கள். தமிழகத்தில் தொழில் தொடங்க நாங்கள் முன்வருகிறோம் என்று மனமுவந்து வெளிநாட்டினர் சொல்கிறார்கள். முதல் கட்டமாக 8 ஆயிரத்து 895 கோடி ரூபாய்க்கு தொழில் தொடங்க முன்வந்துள்ளனர். இன்னும் மேலும் பல தொழில் அதிபர்கள் முன்வர உள்ளனர்.

அது தொடர்பாக தொழில் அதிபர்கள் தொடர்ந்து என்னுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மு.க.ஸ்டாலின் பாராட்டு எங்களுக்கு தேவையில்லை. அவரது பாராட்டை வைத்துக் கொண்டா? இந்த அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. அவர் விமர்சனம் செய்யாமல் இருந்தாலே பாராட்டுக்குரியது தான். எனவே ஒரு திட்டத்தை தொடங்கும் போது உடனடியாக அதை நடைமுறைப்படுத்த முடியாது. அது அவருக்கு தெரியும். ஆனால் பாராட்டுவதற்கு அவருக்கு மனம் இல்லை. குறுகிய எண்ணம் கொண்ட ஒருவர் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார்.

இந்த ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை என்று சொல்கிறார்கள். கோவை மாவட்டத்தில் 50 ஆண்டுகாலமாக நிலுவையில் இருந்த அத்திக்கடவு-அவினாசி திட்டம் ஆயிரத்து 682 கோடி ரூபாய் முழுக்க முழுக்க மாநில நிதியில் இருந்து நிறைவேற்ற ஒப்பந்தம் வழங்கப்பட்டு பணி தொடங்கப்பட்டு விட்டது. இதையெல்லாம் அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இது தவிர கோவை மாநகரில் எவ்வளவு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன தெரியுமா? கோவை சுங்கம் பகுதியில் ரூ.253 கோடி செலவில் மேம்பாலம். கவுண்டம்பாளையம் சந்திப்பில் ரூ.65 கோடி செலவில் மேம்பாலம். ஜி.என்.சந்திப்பில் ரூ.42 கோடி செலவில் மேம்பாலம். உக்கடம் சந்திப்பில் ரூ.127 கோடி செலவில் மேம்பாலம். காந்திபுரம் உயர் மட்ட மேம்பாலம்.

அவர்கள் பேசினார்கள். ஆனால் செயல்படுத்தவில்லை. காந்திபுரம் மேம்பாலத்தை விட்டு விட்டு போய் விட்டார்கள்.நாங்கள் வந்து டெண்டர் விட்டு பணிகளை நிறைவேற்றி தற்போது மக்களின் பயன்பாட்டில் உள்ளது. காந்திபுரம் மேம்பாலத்தின் 2-ம் கட்ட பாலம் நவம்பர் மாதம் திறக்க உள்ளோம். கோவை உப்பிலிபாளையம் முதல் விமான நிலையம் வரை 9 கிலோமீட்டர் தூரத்துக்கு உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட உள்ளது. சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவாக உள்ளது. அந்த பணிகள் இன்னும் 3 மாதத்தில் தொடங்கப்பட உள்ளது.

கோவையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பில்லூர் 3-ம் கட்ட குடிநீர் திட்டம், நவீன ஒருங்கிணைந்த பஸ் நிலையம், 20 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள விமான நிலைய விரிவாக்கம் போன்ற திட்டங்களை குறுகிய காலத்தில் நிறைவேற்றி வருகிறோம். கோவை மாவட்டத்தில் மட்டுமே இத்தனை திட்டங்கள் என்றால் தமிழகத்தில் உள்ள அத்தனை மாவட்டங்களிலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். ஆனால் மு.க.ஸ்டாலின் வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு தவறான பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்.

நான் இஸ்ரேல் சென்று நீர் ஆதாரத்தை எப்படி செயல்படுத்துவது என்று விரிவான ஆலோசனை செய்வேன் என்று சொன்னேன். அதற்கு மு.க.ஸ்டாலின் இங்குள்ள உபரி நீரையே சேமிக்கவில்லை என்று கிண்டலடித்து பத்திரிகையில் செய்தி வெளியிட்டுள்ளார். இவரது தந்தை 5 முறை முதல்-அமைச்சராக இருந்துள்ளார். அவர் எத்தனை தடுப்பணை கட்டியுள்ளார்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொள்ளிடத்தில் ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் என்று அறிவித்தார். அதன்பிறகுநான் முதல்- அமைச்சராக பொறுப்பேற்று அங்கு தடுப்பணை கட்டுவதற்கான டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மு.க.ஸ்டாலின் எதையும் தெரிந்து பேச வேண்டும். அதுமட்டுமல்லாமல் கரூர் புகளூர் காகித ஆலை அருகில் தண்ணீரை தேக்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கும். காவிரி ஆற்றிலிருந்து கொள்ளிடம் வரை மேலும் 3 தடுப்பணைகள் கட்டுவதற்கான பணிகள் தொடங்க உள்ளன

எனவே நான் பொறுப்பேற்றது முதல் உபரியாக வெளியேறுகிற நீரை தடுப்பணைகள் கட்டி அதன் மூலம் நிலத்தடி நீரை உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறேன். நீங்கள் இத்தனை ஆண்டுகாலம் ஆட்சிபொறுப்பேற்று உள்ளீர்கள். கருணாநிதி எத்தனை முறை முதல்- அமைச்சராக இருந்தார். நீங்கள் துணை முதல்-அமைச்சராக இருந்தீர்கள். காவிரி ஆற்றில் எத்தனை தடுப்பணை கட்டியிருக்கிறீர்கள். விவசாயத்துக்கு நான் என்ன செய்தேன் என்று மு.க.ஸ்டாலின் கேட்கிறார். நான் இதையெல்லாம் செய்திருக்கிறேன். புள்ளி விவரங்களுடன் நாங்கள் சொல்கிறோம்.

அதுமட்டுமல்லாமல் நீர் மேலாண்மையை உருவாக்க ஓய்வு பெற்ற 2 தலைமை பொறியாளர்கள், 3 கண்காணிப்பு பொறியாளர்கள் சேர்ந்து கடந்த 1½ ஆண்டுகளாக பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். எங்கெல்லாம் உபரியாக தண்ணீர் வெளியேறி கடலில் வீணாக கலக்கிறது என்று கண்டறிந்து தடுப்பணை கட்ட வேண்டும் என்று அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்து உள்ளனர். அதன் அடிப்படையில் தான் தமிழக அரசு சட்டமன்றத்தில் ஆயிரம் கோடி ரூபாயில் தடுப்பணை கட்டப்படும் என்று அறிவித்து அதில் 600 கோடி ரூபாய்க்கு தடுப்பணை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மு.க.ஸ்டாலின் யாரோ எழுதிக் கொடுப்பதை வைத்து பேசிக் கொண்டிருக்கிறார். பருவ காலங்களில் பெய்யும் மழை நீரை சேமித்து வைப்பதற்காக குளங்களை தூர் வாரி வருகிறோம். அதையும் குறை சொல்லி வருகிறார். இதில் ஊழல் நடந்தது என்று சொல்கிறார். இதில் எப்படி ஊழல் நடக்க முடியும். இது முழுக்க முழுக்க அந்தந்த பகுதி விவசாயிகளிடமே பணியை ஒப்படைக்கிறோம். இதற்கு விவசாயிகளிடம் நல்ல வரவேற்பு இருந்தது.

2-ம் கட்டமாக ரூ.358 கோடி நிதி ஒதுக்கி ஆயிரத்து 211 ஏரிகள் தூர் வாரப்பட்டு அந்த பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. 3-ம் கட்டமாக 2019-20 ஆண்டுகளில் 500 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறோம். டெல்டா பகுதிகளில் உள்ள கால்வாய்களை தூர் வார ரூ.68 கோடி நிதி ஒதுக்கி அந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பணிகள் கண்காணிக்கப்படுகின்றன. இதில் எங்கு ஊழல் நடக்கிறது என்று சொன்னால் நடவடிக்கை எடுக்கலாம். இந்த திட்டத்தை மு.க. ஸ்டாலின் வேண்டுமென்றே கொச்சைப்படுத்தி திசை திருப்பி வருகிறார்.

தமிழகத்தை பொறுத்தவரை மின்மிகை மாநிலமாக உள்ளது. தொழில் தொடங்குவதற்கான அனுமதி ஒற்றை சாளர முறையில் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள நிலைமையை வெளிநாட்டுக்கு சென்று சொன்னால் தானே தெரியும். அந்த வகையில் தான் நாங்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றோம்.

கேரள முதல்-அமைச்சரை சந்தித்து பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசுவோம். சிறுவாணி அணையில் முழு கொள்ளளவில் தண்ணீரை தேக்கி வைப்பது குறித்து தற்போது வெளிப்படையாக பேச முடியாது. மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டம் மிக நல்ல சட்டம். தமிழகத்தில் 8 வழிசாலை அமைப்பது என்றால் போராட்டம் நடத்துகிறார்கள். இதற்குதான் வெளிநாடு செல்ல வேண்டும். அங்கு போக்குவரத்து எப்படி உள்ளது, இங்கு எப்படி உள்ளது என்று அங்கு சென்றால் தான் தெரியும். சட்டமன்றத்தில் நாங்கள் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என்று கூறினார். மு.க.ஸ்டாலின். சட்டசபை சபாநாயகரும் எங்களுக்கு உத்தரவு அளித்தார். அதன்படி பெரும்பான்மையை நாங்களும் நிரூபித்தோம். ஆனால் மு.க.ஸ்டாலின் சட்டசபைக்கு வெளியே வந்து சட்டையை கிழித்து விட்டு வெளியே வந்து நின்றார். அதுபோல தான் இப்போதும் நடந்து கொள்கிறார். தமிழகத்தை பொறுத்தவரை பொருளாதார தேக்கம் இங்கு இல்லை.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அப்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், வி.சி.ஆறுகுட்டி, ஓ.கே.சின்னராஜ், கஸ்தூரிவாசு, கந்தசாமி, முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி மற்றும் வால்பாறை அமீது உள்பட பலர் உடன் இருந்தனர். அதன்பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரவு 8.30 மணியளவில் விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

முன்னதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கோவை தனியார் ஆஸ்பத்திரியில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் கோவை தெற்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அம்மன் அர்ச்சுனனை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். அப்போது அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ. குடும்பத்தினர், கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story