இறால் வளர்ப்பில் அதிக லாபம் கிடைப்பதாக கூறி 20 பேரிடம் ரூ.1¼ கோடி மோசடி - சென்னையை சேர்ந்தவர் கைது


இறால் வளர்ப்பில் அதிக லாபம் கிடைப்பதாக கூறி 20 பேரிடம் ரூ.1¼ கோடி மோசடி - சென்னையை சேர்ந்தவர் கைது
x
தினத்தந்தி 12 Sep 2019 11:00 PM GMT (Updated: 12 Sep 2019 11:16 PM GMT)

இறால் வளர்ப்பில் அதிக லாபம் கிடைப்பதாக கூறி 20 பேரிடம் ரூ.1¼ கோடி மோசடி செய்த சென்னையை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்,

சேலம் அழகாபுரம் ஏ.டி.எஸ். நகர் பகுதியை சேர்ந்தவர் பீதாம்பரம் (வயது 46). இவர் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமாரை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில், சென்னை வடபழனியை சேர்ந்த லட்சுமணன்(39) என்பவர் சேலம் ஏ.வி.ஆர். ரவுண்டானா அருகே மல்டி லெவல் ஆன்லைன் மார்க்கெட்டிங் நிறுவனம் நடத்தி வந்தார்.

இறால், நண்டு வளர்ப்பில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறி இந்த நிறுவனத்தில் ஆன்லைன் மூலம் அவர் ஆட்களை சேர்த்து வந்தார். இதை நம்பி நான் உள்பட மொத்தம் 20 பேர் அந்த நிறுவனத்தில் ரூ.1¼ கோடி வரை முதலீடு செய்தோம். ஆனால் குறிப்பிட்ட தேதியில் தங்களுக்கு வரவேண்டிய முதலீடு மற்றும் பலன்தொகை கிடைக்கவில்லை.

இதனிடையே அந்த நிறுவனத்தை லட்சுமணன் மூடிவிட்டு சென்றுவிட்டார். எனவே ரூ.1¼ கோடி வரை மோசடி செய்த அவரை கைது செய்து எங்களுக்கு பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்த சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் லட்சுமணன் இறால், நண்டு வளர்ப்பில் அதிக லாபம் கிடைப்பதாக கூறி பீதாம்பரம் உள்பட 20 பேரிடம் ரூ.1¼ கோடி மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து லட்சுமணனை போலீசார் கைது செய்தனர். மேலும் இவருடைய நிறுவனத்தில் வேறு யாராவது பணத்தை முதலீடு செய்து ஏமாந்தார்களா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story