புதிய வீடு கட்ட விண்ணப்பித்தவரிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கோலார் நகரசபை கமிஷனர் கைது
புதிய வீடு கட்ட விண்ணப்பித்தவரிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கோலார் நகரசபை கமிஷனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோலார் தங்கவயல்,
புதிய வீடு கட்ட விண்ணப்பித்தவரிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கோலார் நகரசபை கமிஷனர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொரு வழக்கில் சிந்தாமணியில் நில அளவையரும் சிக்கினார்.
நகரசபை கமிஷனர் கைது
கோலார் நகரசபை கமிஷனராக (பொறுப்பு) இருப்பவர் சுதாகர் ஷெட்டி (வயது 55). இந்த நிலையில் இவரிடம் கோலார் தாலுகா கலமனபேடி கிராமத்தை சேர்ந்த சலபதி என்பவர், டவுனில் புதிய வீடு கட்டுவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார். இந்த மனுவை பரிசீலனை செய்த சுதாகர் ஷெட்டி, சலபதியிடம் தனக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் அனுமதி கொடுப்பதாக தெரிவித்தார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சலபதி, இதுகுறித்து ஊழல் தடுப்பு படையில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து ஊழல் தடுப்பு படையினர் அவருக்கு அறிவுரை கூறினர். அதன்படி சுதாகர் ஷெட்டியை தொடர்புகொண்ட சலபதி, ரூ.2 ஆயிரம் லஞ்சம் கொடுப்பதாக கூறினார். இதற்கு சுதாகர்ஷெட்டியும் ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் நேற்று மதியம் சலபதி, சுதாகர் ஷெட்டியின் உதவியாளர் சாகர் என்பவரிடம் ரூ.2 ஆயிரத்தை கொடுத்தார். அந்த பணத்தை சாகர் வாங்கினார். அப்போது அங்கு மறைந்து இருந்த ஊழல் தடுப்பு படையினர் சாகரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும், நகரசபை கமிஷனர் சுதாகர் ஷெட்டியையும் ஊழல் தடுப்பு படையினர் கைது செய்தனர்.
நில அளவையர்
இதேபோல, சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா அலுவலகத்தில் நில அளவையர்களாக வேலை பார்த்து வருபவர்கள் ஸ்ரீதர் ஆச்சாரி, திம்மராஜூ. இவர்களிடம் சிந்தாமணி டவுன் சாந்தி நகரை சேர்ந்த சுப்பாரெட்டி என்பவர், கோனபள்ளி கிராமத்தில் தனது பாட்டியின் பெயரில் உள்ள நிலத்துக்கு பட்டா மாற்றுவதற்கு மனு செய்திருந்தார். அந்த மனுவை பரிசீலனை செய்த 2 பேரும், ரூ.60 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் பட்டாவில் பெயர் மாற்றம் செய்து தருவதாக ஸ்ரீதர் ஆச்சாரியும், திம்மராஜூவும் கூறியுள்ளனர்.
இதுகுறித்த சுப்பாரெட்டி, ஊழல் தடுப்பு படையில் புகார் கொடுத்தார். அவர்கள் கொடுத்த அறிவுரையின்பேரில், நில அளவையர்களை சந்தித்த சுப்பாரெட்டி, ரூ.10 ஆயிரம் கொடுப்பதாக கூறினார்.
இதற்கு 2 பேரும் ஒப்புக்கொண்டனர். இந்த நிலையில் நேற்று சுப்பாரெட்டி, ரூ.10 ஆயிரத்தை நில அளவையர் ஸ்ரீதர் ஆச்சாரியிடம் கொடுத்தார். அந்த பணத்தை ஸ்ரீதர் ஆச்சாரி வாங்கினார்.
அந்த சமயத்தில் அங்கு மறைந்து இருந்த ஊழல் தடுப்பு படையினர் ஸ்ரீதர் ஆச்சாரியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். முன்னதாக இதனை அறிந்த திம்மராஜூ தலைமறைவாகி விட்டார். அவரை ஊழல் தடுப்பு படையினர் தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story