தர்மபுரி-மொரப்பூர் ரெயில்பாதை திட்டம் 2 ஆண்டுகளில் பயன்பாட்டிற்கு வரும் - டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேட்டி


தர்மபுரி-மொரப்பூர் ரெயில்பாதை திட்டம் 2 ஆண்டுகளில் பயன்பாட்டிற்கு வரும் - டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 14 Sept 2019 5:00 AM IST (Updated: 14 Sept 2019 1:16 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி-மொரப்பூர் ரெயில்பாதை திட்டம் இன்னும் 2 ஆண்டுகளில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு நடத்திய டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.

மொரப்பூர்,

தர்மபுரி-மொரப்பூர் ரெயில்பாதை இணைப்பு திட்டத்திற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் முன்னாள் மத்தியமந்திரி டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. மொரப்பூர் பகுதியில் நடக்கும் இந்த ரெயில்திட்ட பணிகளை நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி முன்னிலை வகித்தார். ரெயில்வே கட்டுமான பிரிவு துணை முதன்மை பொறியாளர் ராஜகோபால், பொறியாளர்கள் ராமலிங்கம், எத்திராஜ் ஆகியோரிடம் திட்ட பணிகளின் நிலை குறித்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேட்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது அவர் கூறியதாவது:-

தர்மபுரி-மொரப்பூர் ரெயில்பாதை இணைப்பு திட்டம் தர்மபுரி மாவட்ட மக்களின் 78 ஆண்டுகால கனவு. இந்த நிலையில் நான் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது இந்த திட்டத்திற்காக 18 முறை மத்திய ரெயில்வே மந்திரி மற்றும் துறைசார்ந்த அதிகாரிகளை சந்தித்துபேசி வலியுறுத்தியதன் பேரில் கடந்த மார்ச் மாதம் 4-ந்தேதி இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய ரெயில்வே மந்திரி பியூஸ்கோயல் தர்மபுரியில் அடிக்கல் நாட்டினார்.

இந்த திட்டத்திற்காக ரூ.358 கோடியே 95 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. முதல்கட்ட பணிக்காக ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி நடந்து வருகிறது. 36 கி.மீ. தூரம் கொண்ட இந்த ரெயில்பாதை திட்டத்திற்கு 28 கி.மீ. அளவிற்குரிய நிலம் ரெயில்வேயிடம் உள்ளது. மீதமுள்ள 8 கி.மீ. அளவுள்ள நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இந்த நிலத்தை கையகப்படுத்தி தர தமிழக அரசு உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

அடுத்த கட்டமாக மத்திய ரெயில்வே மந்திரி பியூஸ்கோயலை சந்தித்து இந்த திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்துவேன். இதேபோல் தர்மபுரி மாவட்ட கலெக்டரிடம் பேசி நிலம் கையகப்படுத்தும் பணிகளை விரைவுபடுத்த வருவாய்த்துறை-ரெயில்வேதுறை அதிகாரிகள் கொண்ட ஒரு குழுவை அமைக்கவும் வலியுறுத்தப்படும். தமிழகஅரசிடமும் இதுதொடர்பாக பேசுவேன். தற்போது 12 கி.மீ. தூரத்திற்கு பணிகள் முடிவடைந்து உள்ளன.

தர்மபுரி நகரின் அருகே உள்ள 8 கி.மீ. தூரத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணியில் சில சிக்கல்கள் உள்ளன. இந்த திட்டத்திற்கான நிலம் முழுக்க முழுக்க ரெயில்வே இடம்தான். அந்த நிலத்தை கையகப்படுத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டால் இன்னும் 1½ முதல் 2 ஆண்டுகளில் தர்மபுரி-மொரப்பூர் ரெயில்பாதை திட்டம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும். தர்மபுரி-சென்னை இடையே நேரடி ரெயில்போக்குவரத்து ஏற்படும். தர்மபுரி ரெயில்நிலையம் ஜங்சனாக மாறும். அதன்மூலம் தர்மபுரி மாவட்டம் மிகப்பெரிய வளர்ச்சியை பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரன், மாநில துணைத்தலைவர்கள் பாடிசெல்வம், சாந்தமூர்த்தி, தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில செயலாளர் வேலுச்சாமி, மாவட்ட செயலாளர்கள் அரசாங்கம், பெரியசாமி, பாட்டாளி இளைஞர் சங்க மாநில செயலாளர்கள் முருகசாமி, செந்தில் உள்பட கட்சி நிர்வாகிகள், ரெயில்வே துறையை சேர்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story