9 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் வண்டல்-அவரிக்காடு இடையே பாலம் கட்டும் பணி


9 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் வண்டல்-அவரிக்காடு இடையே பாலம் கட்டும் பணி
x
தினத்தந்தி 15 Sep 2019 10:45 PM GMT (Updated: 15 Sep 2019 7:58 PM GMT)

9 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் வண்டல்-அவரிக்காடு இடையே பாலம் கட்டும் பணி விரைந்து முடிக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு அருகே வண்டல், குண்டுரான்வெளி, அவரிக்காடு ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். வண்டல், குண்டுரான்வெளி கிராமத்தில் இருந்து பொதுமக்கள் அவரிக்காட்டுக்கு வந்து அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு பஸ் ஏரி சென்று வருகின்றனர்.

இந்த கிராமங்களில் நல்லாறு-அடப்பாறு ஓடுகின்றன. இந்த கிராமங்களுக்கு இடையே பால வசதி கிடையாது. இதனால் மழைக்காலங்களில் இந்த ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் வண்டல் கிராமத்தில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள், விவசாயிகள் ஆகியோர் படகுகளில் அவரிக்காடு சென்று அங்கிருந்து தலைஞாயிறு, நாகை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

பாலம் கட்டும் பணி

வண்டல்-அவரிக்காடு இடையே பாலம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதை தொடர்ந்து 9 ஆண்டுகளுக்கு முன்பு வண்டல்-அவரிக்காடு இடையே நல்லாறு, அடப்பாற்றின் குறுக்கே ரூ.11.35 கோடி மதிப்பில் பாலம் கட்டும் பணி தொடங்கியது. இதனால் பொதுமக்கள் சென்று வர தற்காலிகமாக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

2 ஆண்டுகளில் முடிய வேண்டிய பாலம் கட்டும் பணி பல்வேறு காரணங்களால் தாமதம் ஏற்பட்டு ஆமை வேகத்தில் நடைபெற்றதால் இன்னும் முடிவடையாமல் உள்ளது.பாலம் கட்டி முடிக்கப்பட்டு மற்ற பகுதிகளை போல் திறக்கப்பட்டு போக்குவரத்து நடைபெறும் என கிராம மக்கள் நினைத்திருந்தனர். ஆனால் பாலப்பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால் எப்போது பாலம் கட்டி முடிக்கப்பட்டு போக்குவரத்துக்கு திறந்து விட போகிறார்கள் என கவலையுடன் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

95 சதவீதம்

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் படகில் செல்லும் போது அச்சத்துடனே சென்று வருகின்றனர்.

பாலப்பணிகள் 95 சதவீதம் முடிவடைந்து விட்டது. தற்போது நல்லாற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்வதால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பாதை தண்ணீரில் மூழ்கியது. இதனால் வண்டல், குண்டூரான்வெளி கிராம மக்கள் ஆற்றில் இறங்கி அவரிக்காட்டிற்கு சென்று வருகின்றனர்.

9 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் பாலப்பணியை முடித்து விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என கிராமமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Next Story