சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதார் அட்டையை ஒப்படைக்க கிராம மக்கள் முடிவு; கலெக்டரிடம் மனு


சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதார் அட்டையை ஒப்படைக்க கிராம மக்கள் முடிவு; கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 16 Sep 2019 11:15 PM GMT (Updated: 16 Sep 2019 7:36 PM GMT)

உடுமலை அருகே சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதார் அட்டைய திரும்ப ஒப்படைக்கப்போவதாக கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது உடுமலை அருகே உள்ள ஆமந்தகடவு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

உடுமலை தாலுகா ஆமந்தகடவில் வாட்சன் என்னும் தனியார் நிறுவனம் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் பணிக்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக அமைக்கப்பட்ட மின்கம்பங்கள் அனைத்தும் நீர்வழிப்பாதைகளை ஆக்கிரமித்தும், விவசாயிகள் விளைநிலங்களுக்கு செல்லும் பாதைகளை ஆக்கிரமித்தும் பணி நடந்து வருகிறது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் அருகில் உள்ள விளைநிலங்கள் வழியாக கிராமத்திற்கு புகுந்து விடுகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இதற்கு தடை விதிக்க வேண்டும். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் ஊர்பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரசு மூலம் வழங்கப்பட்ட ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றை திரும்ப ஒப்படைக்கிறோம்.

எங்கள் கிராமத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாலும் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதன் நகல் தங்களிடம் வழங்கியும் எந்தவித ஆதரவும் எங்களுக்கு இல்லாததால் நாங்கள் எங்கள் ஊரைவிட்டு காலி செய்கிறோம். எனவே ஆதார் அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கொங்கு நாடு விவசாயிகள் கட்சியினர் கொடுத்த மனுவில்:-

காங்கேயம் வட்டம் நிழலி கிராமம் வஞ்சிபாளையம் பகுதியில் பி.ஏ.பி. பாசன திட்டம் 4-வது மண்டலத்திற்கு உட்பட்ட குண்டடம் பகிர்மான கிளை வாய்க்கால் மடை பழுதடைந்து விட்டது. நெடுஞ்சாலைத்துறையை தாண்டும் மேற்படி கிளை வாய்க்காலுக்கான பழைய குழாய்கள் அகற்றப்பட்டு, புதிய குழாய்களை பதிக்கப்பட்டிருப்பினும், அந்த பணி இன்னும் முழுமையாக நிறைவு பெறாமல் உள்ளது.

மேலும், சாலையை தாண்டும் பாசன நீரானது, இருபுறமும் உள்ள நிலங்களுக்கு சம அளவில் பிரிந்து செல்லும் வகையில் 3 அடி உயரத்தில் 6-க்கு 6 அடி அளவில் கட்டப்பட்டிருந்த மடை நீர் பகிர்மான தொட்டியும் முழுவதுமாக பழுதான நிலையில் இன்னும் புதிதாக கட்டப்படாமல் உள்ளது. மேலும், மடைநீர் பகிர்மான தொட்டியில் இருந்து தெற்கு, வடக்காக விளை நிலங்களுக்கு போய் கொண்டிருந்த பாசன நீர் குழாய்களும் பிடுங்கி எறியப்பட்டு இன்னும் புதிய குழாய்கள் பதிக்காமல் உள்ளது. கிளை வாய்க்காலின் சாலை விரிவாக்கத்தின் போது பழுதடைந்துவிட்ட கிளை வாயக்கால்களை சீரமைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

ஆதித்தமிழர் ஜனநாயக பேரவையினர் கொடுத்த மனுவில்:- காங்கேயம் வட்டம் நிழலி வாரச்சந்தையில் கடந்த 20 ஆண்டுகளாக மாட்டு இறைச்சி மற்றும் பன்றிக்கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகிறோம். இந்நிலையில் எல்லப்பாளையம் ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் நிழலி வாரச்சந்தையில் இறைச்சி கடைகள் நடத்த கூடாது என கூறியதன் அடிப்படையில் நாங்கள் தொழில் செய்ய முடியவில்லை. எனவே தொடர்ந்து இறைச்சி வியாபாரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

Next Story