தூய்மையை கடைபிடித்ததற்காக செல்லாண்டிபாளையம் அரசு பள்ளிக்கு 2-வது முறையாக தேசிய விருது


தூய்மையை கடைபிடித்ததற்காக செல்லாண்டிபாளையம் அரசு பள்ளிக்கு 2-வது முறையாக தேசிய விருது
x
தினத்தந்தி 19 Sept 2019 4:15 AM IST (Updated: 19 Sept 2019 1:26 AM IST)
t-max-icont-min-icon

தூய்மையை கடைபிடித்ததற்காக செல்லாண்டிபாளையம் அரசு பள்ளிக்கு 2-வது முறையாக தேசிய விருது கிடைத்துள்ளதால் கல்வி அதிகாரி வாழ்த்து கூறினார்.

கரூர்,

மத்திய மனிதவளமேம்பாட்டு அமைச்சகத்தின்கீழ் ஆண்டுதோறும் தூய்மை பள்ளிக்கான தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு புதுடெல்லியிலிருந்து அதிகாரிகள் குழுவினர் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு நேரில் சென்று பள்ளி வளாகம், கழிவறை உள்ளிட்டவற்றின் பராமரிப்பு மற்றும் சுற்றுப்புற சூழலை மேம்படுத்தும் விதமாக மரக்கன்று நடுதல், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல் போன்ற செயல்பாடுகளை ஆய்வு செய்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 53 சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து விருது வழங்கியுள்ளனர்.

இதில், கரூர் மாவட்டம் தோரணக்கல்பட்டி செல்லாண்டிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி 2-ம் இடம் பிடித்து தூய்மைக்கான தேசிய விருதினை 2-வது முறையாக தட்டி சென்றது. இந்த நிலையில் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்லதுரை தலைமையில் ஆசிரிய, ஆசிரியைகள் நேற்று கரூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முத்துகிருஷ்ணனை நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

கரூருக்கு பெருமை

இது தொடர்பாக செல்லாண்டிபாளையம் அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், மாணவர்களுக்கு வெறும் பாடங்களை மட்டும் நடத்தி விட்டு செல்லாமல், நாங்கள் சுற்றுப்புற மேம்பாடு குறித்து எடுத்துரைத்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, அதனை அவர்களது குடியிருப்பு பகுதியிலும் பின்பற்ற செய்ய வைத்துள்ளோம். மேலும் பள்ளியின் வளாகத்தில் காய்கறி தோட்டம் வைக்கப்பட்டு கத்தரி, வெண்டை, சுரக்காய், பரங்கிக்காய் உள்ளிட்ட காய்கறிகள், கீரை வகைகள் உள்ளிட்டவை மாணவர்களால் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காய்கறிகளே சத்துணவுக்கும் பயன்படுத்தப்படுவதால், மாணவர்களது ஆரோக்கியம் மேம்படுகிறது. 2-வது முறையாக தூய்மைக்கான தேசிய விருது பெற்று கரூருக்கு பெருமை சேர்த்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றனர். 

Next Story