கும்பகோணத்தில் தொடர் மழை: செங்கல் உற்பத்தி பாதிப்பு - தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்
கும்பகோணத்தில் தொடர் மழை காரணமாக செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கும்பகோணம்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் காவிரி ஆறு ஓடுகிறது. இங்கு உள்ள காவிரி ஆற்றில் இருந்து குடமுருட்டி ஆறு, திருமலைராயன் ஆறு, அரசலாறு, வெண்ணாறு, வெட்டாறு, மண்ணியாறு, பொய்கை ஆறு உள்ளிட்ட கிளை ஆறுகள் பிரிந்து செல்கின்றன.
இந்த கிளை ஆறுகளை ஒட்டி உள்ள பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. வீரமாங்குடி, மணலூர், பட்டீஸ்வரம், தாராசுரம், அன்னலக்ரகாரம், அரியதிடல், கொற்கை, கீழபழையாறு, மேலபழையாறு, உமையாள்புரம், சத்தியமங்கலம், பாபநாசம், திருப்பனந்தாள், திருவிடைமருதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. செங்கல் சூளைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
சேத்தியாதோப்பு, பண்ருட்டி, அரியலூர், பெரம்பலூர், வேளாக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் செங்கல் சூளைகளிலேயே தங்கியிருந்து செங்கல் உற்பத்தி பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் கும்பகோணம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
பல இடங்களில் சூளைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. காய வைக்கப்பட்டிருந்த செங்கற்கள் மழையில் நனைந்து சேதமடைந்து வருகின்றன. இதனால் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக சூளை உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
தற்போது மழை பெய்து வருவதால் கட்டிட பணிகளும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட செங்கற்கள் விற்பனையாகாமல் சூளைகளில் தேக்கம் அடைந்துள்ளன. மழையில் நனையாமல் இருப்பதற்காக கூரை அமைத்து இந்த
செங்கற்களை தொழிலாளர்கள் பாதுகாத்து வருகிறார்கள்.
இந்த மழை மேலும் தொடரும்பட்சத்தில் செங்கல் சூளைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story