குடிமராமத்து திட்டத்தில் 110 கண்மாய்கள் சீரமைப்பு - கலெக்டர் ஆய்வு


குடிமராமத்து திட்டத்தில் 110 கண்மாய்கள் சீரமைப்பு - கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 20 Sep 2019 11:00 PM GMT (Updated: 20 Sep 2019 9:09 PM GMT)

மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தில் 110 கண்மாய்களில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

சிவகங்கை,

மாவட்டத்தில் பொதுப்பணித்துறை சருகனியாறு வடிநிலக் கோட்டத்தின் மூலம் முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்மாய் சீரமைப்பு பணிகளை கலெக்டர் ஜெயகாந்தன் ஆய்வு செய்தார்.சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், வேம்பங்குடியில் உள்ள பெரிய கண்மாயில் ரூ.40 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை கலெக்டர் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:- மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தில் 110 கண்மாய்களுக்கு ரூ.38 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன.

இதுவரை 30 பாசனக் கண்மாய்களில் முழுமையாக பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பாசனக் கண்மாய்கள் முழுவதும் இன்னும் 10 தினங்களுக்குள் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இதுதவிர ரூ.42 கோடி மதிப்பில் ஊராட்சி ஒன்றிய கண்மாய்களில் குடிமராமத்து பணிகள் நடக்கின்றன. இந்த பணியில் பாசனக் கண்மாயின் உட்பகுதியை ஆழப்படுத்தியும், சீமைக்கருவேல மரங்களை அகற்றியும், கரைகளை பலப்படுத்தப்பட்டும், கண்மாய்களிலுள்ள கழுங்குகளை சீர் செய்வதுடன் பாசனத்திற்கான மடைகளும் சீர் செய்யப்பட்டு வருகின்றன.

தேவைப்படுகின்ற இடங்களில் புதிய மடைகளும் கட்டித்தரப்படுகின்றன. மேலும், பாசனக் கண்மாய்களை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை முற்றிலும் அகற்றப்படுவதுடன் நீர்வரத்து கால்வாய்களும் சீரமைக்கப்படுகிறது. அதனால் தற்போது பெய்து வரும் மழையால் கண்மாய்களுக்கு தடையின்றி தண்ணீர் வந்து சேருகின்றன. இதன் மூலம் மாவட்ட அளவில் பரவலாக பெய்யப்பட்ட மழையினால் அனைத்து கண்மாய்களிலும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுற்று வட்டாரப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயரும். இதனால் விவசாயப் பணிகள் ஆர்வமுடன் தொடங்கப்பட்டுள்ளன.

சருகனியாறு கோட்டம் சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வேம்பங்குடி, ஒக்கூர், நாமனூர், அலவாக்கோட்டை ஆகிய ஊராட்சிகளிலும், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திருப்புவனம், கழுவன்குளம், ஓடாத்தூர் ஆகிய ஊராட்சிகளிலும், இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கச்சாத்தநல்லூர், கீழாயூர், மேலாயூர், நகரக்குடி, அண்டக்குடி, இளையான்குடி, பஞ்சனூர், புலியூர், திருவள்ளுர், சிறுவூர், விசவனூர் ஆகிய ஊராட்சிகளிலும், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மறவமங்களம், மரக்காத்தூர், முடிக்கரை, பெரியகிளுவச்சி, மணியங்குடி, சிலுக்கப்பட்டி, கிராம்புளி, முடிதனை, புல்லுக்கோட்டை, புளுவாக்குடை, செம்பனூர், பண்ணை ஆகிய ஊராட்சிகள் என மொத்தம் 30 பாசனக் கண்மாய்கள் ரூ.14 கோடி மதிப்பில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் 4 ஆயிரத்து 88 எக்டர் நிலங்கள் பயன்பெற உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் நெல் முடிக்கரை பெரியகண்மாய், மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் மானாமதுரை குண்டாமணியன் கண்மாய், இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் இளையான்குடி பெரியகண்மாய், திருவள்ளுர் ஊராட்சியில் திருவள்ளுர் பெரியகண்மாய், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் மறவமங்களம் பெரியகண்மாய் ஆகியவற்றில் நடைபெறும் குடிமராமத்து பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

கலெக்டருடன் பொதுப் பணித்துறை செயற்பொறியாளர்கள் மலர்விழி, ரமேஷ், ராஜூ, உதவி செயற்பொறியாளர்கள் முத்துராமலிங்கம், பாஸ்கரன், கண்ணன், சுரேஷ்குமார், சிங்காரவேலு, முன்னோடி விவசாயிகள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story