ஊட்டி, கூடலூர் உள்பட 4 இடங்களில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் அமைக்க அரசு அனுமதி - கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தகவல்


ஊட்டி, கூடலூர் உள்பட 4 இடங்களில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் அமைக்க அரசு அனுமதி - கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தகவல்
x
தினத்தந்தி 21 Sep 2019 10:45 PM GMT (Updated: 21 Sep 2019 9:35 PM GMT)

ஊட்டி, கூடலூர் உள்பட 4 இடங்களில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் அமைக்க அரசு அனுமதி வழங்கி உள்ளதாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் விவசாயிகளின் குறை தீர்க்கும் கூட்டம் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் தோட்டக்கலை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது பிரச்சினைகளை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். பின்னர் கூட்டத்தில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் பயிர் காப்பீடு செய்யும் விவசாயிகளுக்கு ரசீது வழங்குவதற்கு பொது தகவல் மையத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் பெய்த கனமழையால் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் 489 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கேரட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. இது குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும் சேதம் அடைந்த பயிர்களுக்கு ரூ.58 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஊட்டி பகுதி விவசாயிகள் தங்களது காய்கறிகளை மார்க்கெட்டுக்கு கொண்டு வரும் வகையில் நகராட்சிக்கு சொந்தமான அணிக்கொரை, தீட்டுக்கல் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. மேலும் எல்க்ஹில் பகுதியில் சிறு பாலங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தர்ஹில், டன்மேரி, ஆர்.கே.புரம் பகுதிகளில் குடிநீர் திட்ட குழாய்கள் பதிக்க குழிகள் தோண்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் சாலைகள் சேதம் அடைந்துள்ளது. இதை சீரமைக்க நகராட்சி மூலம் டெண்டர்கள் விடப்பட்டுள்ளது. பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

மஞ்சூர், குன்னூர், தலைக்குந்தா பகுதியில் நெடுஞ்சாலையோரம் உள்ள ஆபத்தான கற்பூர சீகை மரங்கள் கண்டறிந்து அகற்றப்படும். தனியாருக்கு சொந்தமான கற்பூர சீகை மரங்களை வெட்ட மாவட்ட நிர்வாகத்துக்கு இணையதளம் வழியாக விண்ணப்பித்து அனுமதி பெறலாம். ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யும் டாக்டர் பணியிடம் காலியாக உள்ளது. ஊட்டி தலைமை ஆஸ்பத்திரியை மருத்துவக்கல்லூரியாக மாற்ற அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அப்போது மருத்துவர்கள் பணியிடங்களும் நிரப்பப்படும்.

தமிழ்நாடு வேளாண் விற்பனை வணிக மூலம் ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் 8 இடங்களில் காய்கறிகள், பழங்கள் பதப்படுத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி ஆகிய 4 இடங்களில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

மேட்டுப்பாளைத்தில் உள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் விவசாயிகள் கொண்டு வரும் உருளைக்கிழங்குகளை தரம் பிரிக்க நவீன எந்திரம் வாங்கப்பட்டது. இந்த எந்திரம் ஏற்கத்தக்கதாக இல்லை. இந்த எந்திரத்தில் கூலி தொழிலாளர்களை கொண்டு உருளைக்கிழங்கு மற்றும் காய்கறிகளை கொட்ட வேண்டியது உள்ளது. இதனால் கூலி தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க விவசாயிகள் முன் வருவது இல்லை. இதனால் எந்திரம் செயல்படுத்தப்படாமல் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் ரவி உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story