ஆலோசனை கூட்டத்தின்போது போலீசாருடன், மாட்டு வண்டி தொழிலாளர்கள் வாக்குவாதம்


ஆலோசனை கூட்டத்தின்போது போலீசாருடன், மாட்டு வண்டி தொழிலாளர்கள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 22 Sep 2019 10:00 PM GMT (Updated: 22 Sep 2019 8:28 PM GMT)

பாகூர் போலீஸ் நிலையத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தின்போது போலீசாருடன் மாட்டு வண்டி தொழிலாளர்கள் அரசு சார்பில் மணல் குவாரி அமைக்கப்படாதது குறித்து கேள்வி எழுப்பி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

பாகூர்,

புதுச்சேரி தெற்குப் பகுதி போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் பாகூர் போலீஸ் நிலையத்தில் நேற்று மாட்டு வண்டி தொழிலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக்கூட்டத்திற்கு பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுதம் சிவகணேஷ் தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், தன்வந்திரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலோசனைக் கூட்டத்தில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் பேசுகையில் “தடையை மீறி தென்பெண்ணை ஆற்றில் மணல் எடுப்போர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் மீறுபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

அதற்கு மாட்டுவண்டி தொழிலாளர்கள் கூறுகையில் “எங்களுக்கு மாட்டுவண்டி தொழிலைவிட்டால் வேறு எந்த தொழிலும் இல்லை. மேலும் அரசாங்கமும் அதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவல்துறை மாட்டுவண்டி தொழிலாளர்களை மட்டும் குறிவைத்து கைது செய்து வருகிறீர்கள் என்று போலீசாருடன் மாட்டுவண்டி தொழிலாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதுமட்டுமின்றி இத்தொழிலை மட்டுமே நம்பியுள்ள மாட்டுவண்டி தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் இருந்து வருகிறார்கள்.

புதுவை அரசு மதுக்கடைகளுக்கு கொடுக்கும் அங்கீகாரத்தை ஏன்? மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு கொடுக்க மறுக்கிறது. சோரியாங்குப்பம் பகுதிக்கு மணல் குவாரி அமைத்து தருவதாக அரசாங்கம் கூறியிருக்கிறது? ஆனால் கடந்த 2 வருடங்களாக அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் ஏன் எடுக்கவில்லை? மாட்டுவண்டி தொழிலாளர்கள் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை அரசு உடனே நீக்க வேண்டும்.

இவ்வாறு ஆலோசனைக் கூட்டத்தில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் கூறி, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பாகூர், குருவிநத்தம், சோரியாங்குப்பம், உள்பட 30-க்கும் மேற்பட்ட மாட்டுவண்டி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story