விளாத்திகுளத்தில் இருந்து மந்திகுளம் வழியாக குளத்தூருக்கு பஸ் வசதி - அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்


விளாத்திகுளத்தில் இருந்து மந்திகுளம் வழியாக குளத்தூருக்கு பஸ் வசதி - அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 22 Sep 2019 11:00 PM GMT (Updated: 22 Sep 2019 8:30 PM GMT)

விளாத்திகுளத்தில் இருந்து மந்திகுளம் வழியாக குளத்தூருக்கு அரசு பஸ் போக்குவரத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

விளாத்திகுளம், 

விளாத்திகுளம்-குளத்தூர் சாலையில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலையில் மந்திகுளம் கிராமம் உள்ளது. இங்குள்ள பொதுமக்கள், மாணவர்கள், விவசாயிகள் மந்திகுளம் கிராமத்தில் இருந்து விளாத்திகுளம்-குளத்தூர் சாலைக்கு தினமும் நடந்து சென்று குளத்தூர், விளாத்திகுளம், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கிறார்கள்.

மந்திகுளத்தில் இருந்து செல்ல பஸ் வசதி கிடையாது. இந்த நிலையில் விளாத்திகுளத்தில் இருந்து குளத்தூர் செல்லும் பஸ்சை மந்திகுளம் வழியாக இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் சின்னப்பன் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து சின்னப்பன் எம்.எல்.ஏ. போக்குவரத்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி விளாத்திகுளத்தில் இருந்து குளத்தூர் செல்லும் பஸ்சை மந்திகுளம் கிராமம் வழியாக செல்ல நடவடிக்கை மேற்கொண்டார்.

இந்த பஸ் போக்குவரத்தை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி, சின்னப்பன் எம்.எல்.ஏ., விளாத்திகுளம் பஞ்சாயத்து செயல் அலுவலர் தனசிங், தாசில்தார் (பொறுப்பு) கணேசன், மண்டல துணை தாசில்தார் ரத்தினசங்கர், போக்குவரத்து கழக கிளை மேலாளர் சாமி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பால்ராஜ், தொழில் அதிபர் குட்லக் செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story