சேலம்-தர்மபுரி மாவட்ட எல்லையில் சேறும், சகதியுமான சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டம்


சேலம்-தர்மபுரி மாவட்ட எல்லையில் சேறும், சகதியுமான சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 22 Sep 2019 11:00 PM GMT (Updated: 22 Sep 2019 10:29 PM GMT)

சேலம்-தர்மபுரி மாவட்ட எல்லையில் சேறும், சகதியுமான சாலையில் பொதுமக்கள் நாற்று நட்டு போராட்டம் நடத்தினர்.

ஓமலூர்,

சேலம்-தர்மபுரி மாவட்ட எல்லையில் கணவாய்புதூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் உள்ள ராமமூர்த்தி நகர் வழியாக தர்மபுரி மாவட்டம், பொம்மிடியில் இருந்து சேலம் மாவட்டம், ஜாலிகொட்டாய், தாட்ராவூர், கொங்காரப்பட்டி, பொம்மியம்பட்டி, தீவட்டிப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் தார்சாலை உள்ளது. கொங்காரப்பட்டி, தாட்ராவூர், அம்மனேரி, பொம்மியம்பட்டி ஆகிய இடங்களில் ஜல்லி கிரஷர்கள் உள்ளன. ராமமூர்த்தி நகர் வழியாக தான் பொதுமக்கள் மட்டுமன்றி இந்த கிரஷர்களில் இருந்தும் 30 டன் வரை ஜல்லி ஏற்றிகொண்டு டிப்பர் லாரிகள் நாள்தோறும் சென்று வருகின்றன.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழைக்கு அதிகப்படியான எடையுடன் ஜல்லி ஏற்றி செல்லும் டிப்பர் லாரிகள் சென்று வருவதால் தார் சாலை சேதமானதுடன், மண் சாலையாகி சேறும், சகதியுமாகி காட்சி அளிக்கிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்ல முடியாத அளவிற்கு இந்த சாலை மிகவும் சேதம் அடைந்த நிலையில் உள்ளது.

நாற்று நட்டு போராட்டம்

இதைத்தொடர்ந்து இந்த சாலையை சீரமைத்து தரக்கோரி அந்த பகுதி பொதுமக்கள் நேற்று சேறும், சகதியுமான சாலையில் நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் போராட்டம் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கிடைக்காத நிலையில், அதிகாரிகள் யாரும் அங்கு வரவில்லை.

இதையடுத்து சாலையில் நாற்று நட்டு தங்கள் எதிர்ப்பை போராட்டமாக வெளிப்படுத்திய அந்த பகுதி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story