பிரதமர் மோடி-சீன அதிபர் வருகையையொட்டி புதுப்பொலிவு பெறும் மாமல்லபுரம் சாலை, மின்விளக்குகள் புதுப்பிப்பு


பிரதமர் மோடி-சீன அதிபர் வருகையையொட்டி புதுப்பொலிவு பெறும் மாமல்லபுரம் சாலை, மின்விளக்குகள் புதுப்பிப்பு
x
தினத்தந்தி 24 Sept 2019 4:15 AM IST (Updated: 24 Sept 2019 12:50 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் வருகை தருவதையொட்டி மாமல்லபுரம் நகரத்தில் சாலை, மின்விளக்குகள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள சர்வதேச சுற்றுலா மையமான மாமல்லபுரத்திற்கு வருகை தரும் சீன அதிபர் ஜின்பிங்-பிரதமர் நரேந்திரமோடி ஆகிய இருவரும் அக்டோபர் மாதம் 12 மற்றும் 13-ந் தேதிகளில் சந்தித்து பேசுகின்றனர். யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட மாமல்லபுரம் கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு ஆகிய பாரம்பரிய நினைவு சின்னங்களை இரு நாட்டு தலைவர்களும் சுற்றிப்பார்க்க உள்ளனர்.

இதையடுத்து இரு நாட்டு தலைவர்களை வரவேற்க மாமல்லபுரம் நகரம் புதுப்பொலிவோடு தயாராகி வருகிறது. மேலும் அவர்களின் கார்கள் சென்று வருவதற்கு வசதியாக அர்ச்சுனன் தபசு பகுதியில் புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் மாமல்லபுரம் நகரம் முழுவதும் புராதன மையங்களில் புதிய சாலைகள் அமைக்கப்பட உள்ளன.

வெண்ணை உருண்டை கல், மகிஷாசூரமர்த்தி மண்டப பகுதியில் நடைபாதைகளும் அமைக்கப்பட்டு வருகிறது. மாமல்லபுரத்தில் இருந்து கடற்கரைச்சாலை வரை புதிதாக மின்விளக்குகளும் பொருத்தப்பட்டு வருகிறது. முக்கிய புராதன சின்ன மையங்களில் குடிநீர் தொட்டிகள் சீரமைக்கப்பட்டு வண்ணங்கள் தீட்டப்பட்டு வருகிறது.

இருநாட்டு தலைவர்களும் திருவிடந்தையில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கி கார் மூலம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம் வர இருப்பதால் கிழக்கு கடற்கரை சாலை முழுவதும் உள்ள தடுப்புச்சுவற்றில் வண்ணங்கள் தீட்டப்பட்டு அழகுபடுத்தப்பட்டு வருகின்றன. மேலும் முக்கிய இடங்களில் உயர் கோபுர விளக்குகளில் மின் விளக்குகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

தற்போது மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. கடலோர காவல்படை மூலம் கடல் பகுதி முழுவதுமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று மாமல்லபுரத்தில் உள்ள கடைளில் மாமல்லபுரம் சரக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் தனிப்படை போலீசார் சென்று ஆய்வு செய்து சோதனை நடத்தினர்.

அப்போது, கடைகளில் வேலை செய்யும் வட மாநில தொழிலாளர்கள் உள்பட பலரின் ஆதார் எண்ணுடன் கூடிய விவரங்களை சேகரித்தனர்.

மாமல்லபுரத்தில் உள்ள தங்கும் விடுதிகள், ஓட்டல்களுக்கும் பாதுகாப்பு தொடர்பாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அங்கு தங்கி உள்ள வெளிநாட்டினர் குறித்தும் அவர்கள் சுற்றுலா விசா காலநீட்டிப்பு உள்ளதா? அல்லது குறைந்த நாட்கள் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்ட விசாவை வைத்துள்ளனரா? என போலீசார் சரிபார்த்தனர்.

இன்னும் சில தினங்களில் மாமல்லபுரம் நகரம் முழுவதும் முழு போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும் என்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது இரு நாட்டு தலைவர்களை வரவேற்கும் வகையில் மாமல்லபுரத்தில் மாவட்ட கலெக்டர் பொன்னையா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல் உள்பட அனைத்து துறை அதிகாரிகளும் முழு மூச்சுடனும் பணியாற்றி பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story