காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் 2 தினங்களில் வெளியிடப்படும் - சித்தராமையா பேட்டி
இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் 2 தினங்களில் வெளியிடப்படும் என்று முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.
பெங்களூரு,
முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா நேற்று உப்பள்ளிக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார், “நாங்கள்(காங்கிரஸ்) வளர்த்த கிளிகள் சித்தராமையாவுக்கு துரோகம் செய்துவிட்டு பறந்துவிட்டன“ என்று கூறினார். அதற்கு முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, “இந்த காங்கிரஸ் தலைவர்கள் நாடகமாடுகிறார்கள், சித்தராமையா வளர்த்த கிளிகள் தான் கூட்டணி ஆட்சியை கவிழ்த்துவிட்டு பறந்துவிட்டன“ என்று கூறினார். அவர்கள் இருவரும் கூறியது அவர்களுடைய கருத்து. இதில் குமாரசாமி தான் பாவம். கூட்டணி ஆட்சி கவிழ்ந்த விரக்தியில் அவருக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. அவர் சற்று சுயநினைவுடன் பேச வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சியினரிடம் பா.ஜனதாவுக்கு வாக்களியுங்கள் என்று குமாரசாமிதான் சொன்னார் என்று ஜி.டி.தேவேகவுடா கூறியுள்ளார். இதில் எது உண்மை, எது நாடகம் என்று நம்ப முடியவில்லை. ஆனால் கூட்டணி அரசு நன்றாகத்தான் நடந்தது என்று குமாரசாமியே நற்சான்றிதழ் கொடுத்தார். நான் இதைப்பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை. எல்லாவற்றையும் குமாரசாமியே ஒப்புக்கொண்டார். இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால் குமாரசாமி இவ்வாறு பேசி வருகிறார்.
நான் காங்கிரஸ் தொண்டர்களுக்கு சொல்லிக் கொள்வது என்னவென்றால் இடைத்தேர்தலை சந்திக்க தயாராகுங்கள். இந்த தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும். இன்னும் 2 நாட்களில் இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.
கட்சிக்கு எதிராக செயல்பட்டவர்களை மக்கள் எப்போதும் மன்னிப்ப தில்லை. காங்கிரசுக்கு எதிராக செயல்பட்டவர் களுக்கு இந்த இடைத்தேர்தல் மூலம் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். இந்த இடைத்தேர்தலில் மக்கள் காங்கிரசுக்கு ஆதரவு அளித்து, 15 தொகுதிகளிலும் வெற்றிபெற வைப்பார்கள். இதன்மூலம் பா.ஜனதாவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். விவசாயக்கடன் இன்னும் தள்ளுபடி செய்யப்படவில்லை என்று விவசாயிகள் கூறிவருகிறார்கள்.
நான் விவசாயக்கடனை சரியாக தள்ளுபடி செய்தேன். அதன் பலனை விவசாயிகள் பெற்றனர். ஆனால் குமாரசாமி, விவசாயக்கடனை சரியாக தள்ளுபடி செய்யவில்லை. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Related Tags :
Next Story