ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டப்பணிகள் 85 சதவீதம் நிறைவு; அதிகாரிகள் பார்வையிட்டனர்


ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டப்பணிகள் 85 சதவீதம் நிறைவு; அதிகாரிகள் பார்வையிட்டனர்
x
தினத்தந்தி 25 Sep 2019 10:15 PM GMT (Updated: 25 Sep 2019 2:16 PM GMT)

ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டப்பணிகள் 85 சதவீதம் நிறைவடைந்த நிலையில், பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள் இன்னும் ஒரு மாதத்தில் வெள்ளோட்டம் பார்க்கப்படும் என்றார்கள்.

பவானி,

ஈரோடு மாநகராட்சி பகுதிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் ‘அம்ருத்’ திட்டத்தில் ரூ.484 கோடியே 45 லட்சம் செலவில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இதில் மத்திய அரசு 50 சதவீதம் நிதியையும், உள்ளாட்சி அமைப்பு 30 சதவீதம் நிதியையும், மாநில அரசு 20 சதவீதம் நிதியையும் ஒதுக்கி உள்ளன.

ஊராட்சிக்கோட்டை அருகில் உள்ள வரதநல்லூர் பகுதியில் காவிரி ஆற்றில் இருந்து நீரேற்றம் செய்யப்பட்டு ஈரோடு மாநகராட்சிக்கு தினமும் தடை இல்லாத பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட இருக்கிறது. இதற்கான பணிகள் எல் அன்டு டி என்ற தனியார் கட்டுமான நிறுவனத்தின் மூலம் செய்யப்பட்டு வருகிறது. ஆற்றில் இருந்து நீரேற்றம் செய்யப்படும் தண்ணீர் பல்வேறு நிலைகளில் சுத்திகரிக்கப்பட்டு பிரமாண்ட குழாய்கள் மூலம் ஈரோடு வ.உ.சி.பூங்கா மற்றும் சூரியம்பாளையத்தில் கட்டப்பட்டு வரும் தொட்டிகளுக்கு கொண்டு வரப்பட உள்ளது.

வரதநல்லூரில் இருந்து வ.உ.சி.பூங்கா தொட்டிக்கு 1,341 மி.மீட்டர் விட்டமுள்ள குழாய்கள் 22.8 கிலோ மீட்டர் தூரத்துக்கு பொருத்தப்பட்டு உள்ளன. வ.உ.சி.பூங்காவில் 118 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பிரமாண்ட தொட்டியும், சூரியம்பாளையத்தில் 42 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியும் கட்டப்படுகிறது. தினசரி ஈரோடு மாநகராட்சிக்கு தேவையான 65 லட்சம் லிட்டர் தண்ணீர் வினியோகிக்க தனித்தனியாக குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

வ.உ.சி.பூங்கா முதன்மை தொட்டியில் இருந்து நீரேற்றம் செய்ய தனியாக ‘பம்பிங்’ அறை கட்டப்பட்டு வருகிறது. இங்கு வினாடிக்கு 16 ஆயிரம் மற்றும் 13 ஆயிரம் லிட்டர் தண்ணீர் நீரேற்றம் செய்யும் வகையில் மோட்டார் பம்புகள் அமைக்கப்பட உள்ளன.

இந்த பணிகள் அனைத்தும் முடிந்து இன்னும் ஒரு மாதத்தில் வெள்ளோட்டம் தொடங்கப்பட உள்ளது. எனவே இந்த பணிகளை அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர். ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் உத்தரவின் பேரில் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், மாநகர பொறியாளர் மதுரம், செயற்பொறியார் விஜயகுமார் ஆகியோர் வரதநல்லூர், வ.உ.சி.பூங்காவில் நடந்து வரும் பணிகளை பார்வையிட்டனர்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் க.தங்கவேல், உதவி நிர்வாக பொறியாளர்கள் விஜயகுமார், பொன்னுசாமி, உதவிப்பொறியாளர்கள் திவ்யா, பிரியதர்ஷினி, சாதனா ஆகியோர் திட்டத்தின் ஒவ்வொரு நிலை குறித்தும் எடுத்துக்கூறினார்கள். மேலும், முதன்மை குழாயில் நீரேற்றம் செய்யும்போது குழாயில் இருந்து வெளியேறும் அழுத்த பரிசோதனையை பொறியாளர்கள் செய்து காட்டினார்கள். நீரேற்றம் செய்யும்போது குழாயில் தொடர் அழுத்தம் இருக்க வேண்டிய அளவு மற்றும் அதனால் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் உயரம் ஆகியவற்றை விளக்கினார்கள்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது:–

ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டப்பணிகள் சுமார் 85 சதவீதம் முடிந்து விட்டது. திட்டத்தை விரைந்து முடிக்க அரசு ஆர்வமாக உள்ளது. வாரம் தோறும் மாவட்ட கலெக்டர் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் கூட்டம் நடத்தப்பட்டு திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன. இதுவரை பணிகள் தொய்வு இல்லாமல் இருக்கிறது. ஏற்கனவே முதல்–அமைச்சர் அறிவித்தபடி இன்னும் ஒரு மாதத்தில் நீரேற்றம் செய்யப்பட்டு முதன்மை தொட்டிகளுக்கு தண்ணீர் கொண்டு வர வெள்ளோட்டம் நடைபெறும்.

இவ்வாறு ஆணையாளர் இளங்கோவன் கூறினார்.

Next Story