மதுரை - செங்கோட்டை இடையே கூடுதல் ரெயில்கள் இயக்கப்படுமா?


மதுரை - செங்கோட்டை இடையே கூடுதல் ரெயில்கள் இயக்கப்படுமா?
x
தினத்தந்தி 28 Sept 2019 4:30 AM IST (Updated: 27 Sept 2019 9:48 PM IST)
t-max-icont-min-icon

மதுரை-செங்கோட்டை இடையேயான அகல ரெயில்பாதையில் கூடுதல் ரெயில்கள் அத்தியாவசியமாக தேவைப்படும் நிலையில் ரெயில்வே நிர்வாகம் இந்த ரெயில்பாதையை தொடர்ந்து புறக்கணிக்கும் நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரெயில்களும் இயக்கப்படாத நிலை நீடிக்கிறது.

விருதுநகர்,

மதுரை-செங்கோட்டை இடையேயான அகல ரெயில்பாதை விருதுநகர் மாவட்டத்தின் மேற்கு பகுதி மக்களுக்கும் நெல்லை மாவட்ட மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது. இந்த ரெயில்பாதை அகல ரெயில்பாதையாக மாற்றப்படுவதற்கு முன்பு கொல்லத்தில் இருந்து சென்னைக்கும் நாகூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட இதர பகுதிகளுக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. அகல ரெயில்பாதையான பின்பு இந்த பாதையில் தற்போது பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் மட்டுமே சென்னை-செங்கோட்டை இடையே இயக்கப்பட்டு வருகிறது. சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் வாரம் 3 முறை இயக்கப்பட்டு வருகிறது. இதுதவிர கொல்லம்-தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயிலும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில்பாதையில் கூடுதல் ரெயில்கள் இயக்கப்பட வேண்டும் என விருதுநகர் மாவட்ட மேற்கு பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் ரெயில்வே நிர்வாகம் தொடர்ந்து இந்த ரெயில்பாதையை புறக்கணித்து வரும் நிலையே தொடர்கிறது.

ஏற்கனவே தாம்பரம்-செங்கோட்டை இடையே அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும் என கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் அறிவிக்கப்பட்டது. 2 முறை அறிவிக்கப்பட்டும் இந்த ரெயில் இன்னும் இயக்கப்படவில்லை. மேலும் விருதுநகர் மாவட்ட மேற்கு பகுதி மக்களுக்கு பயன்படும் வகையில் செங்கோட்டையில் இருந்து கோவை, பெங்களூரு உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட வேண்டும் என பலமுறை வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் ரெயில்வே நிர்வாகம் தொடர்ந்து இதை கண்டுகொள்வதில்லை. சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி ரெயிலாக இயக்கவேண்டுமென வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் அதையும் ரெயில்வே நிர்வாகம் தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது.

மதுரை-கோவை இடையே அகல ரெயில்பாதை திட்டப்பணிகள் முடிந்துள்ள நிலையில் ராமேசுவரம், தூத்துக்குடி ஆகிய ஊர்களில் இருந்து கோவைக்கு ரெயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ள ரெயில்வே நிர்வாகம் செங்கோட்டையில் இருந்து கோவைக்கு ரெயில்களை இயக்க முன் வராதது ஏன் என தெரியவில்லை. விருது நகர் மாவட்டத்தில் ராஜ பாளையம்,சிவகாசி ஆகிய நகரங்கள் தொழில் நகரங்களாகவும் ஸ்ரீவில்லிபுத்தூர் விவசாயம் சார்ந்த நகராகவும் உள்ளது. இப்பகுதி மக்கள் பெரு நகரங்களுக்கு செல்ல விருதுநகருக்கு தான் வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. பல சமயங்களில் முன்பதிவு கிடைக்காத நிலையில் அவர்கள் சாலை போக்குவரத்தை நம்ப வேண்டிய நிலை ஏற்படுகிறது.

விருதுநகரில் இருந்து மானாமதுரை வரையிலான அகலரெயில்பாதை ரூ.271 கோடி மதிப்பீட்டில் கடந்த 2013-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது. இந்த ரெயில் பாதை விருதுநகர் மாவட்டத்தின் கிழக்கு பகுதி மக்களுக்கு பெருமளவில் பயன்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரெயில்வே நிர்வாகம் இந்த ரெயில்பாதையில் வாரம் 3 முறை இயக்கப்படும் ரெயில்களை மட்டுமே இயக்கி வருகிறது. இதனால் விருதுநகர் மாவட்டத்தின் கிழக்கு பகுதி மக்களுக்கும் எதிர்பார்த்த அளவிற்கு பலன் கிடைக்கவில்லை. இந்த ரெயில் பாதையில் கூடுதல் ரெயில்களை இயக்க வேண்டும் என பலமுறை கோரப்பட்டும் ரெயில்வே நிர்வாகம் இதனை கண்டுகொள்ளவில்லை. பெரும் பொருட் செலவில் இந்த ரெயில்பாதை அமைக்கப்பட்டும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து விருதுநகருக்கு வந்து தான் பெரு நகரங்களுக்கு செல்ல முடிகிறது.

எனவே ரெயில்வே நிர்வாகம் விருதுநகர் மாவட்டத்தின் கிழக்கு பகுதியையும் மேற்கு பகுதியை போல புறக்கணித்து வரும் நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் இம்மாவட்டத்தில் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள அகலரெயில்பாதைகளில் அப்பகுதி மக்களுக்கு பயன்படக்கூடிய அளவில் போதிய ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.

எனவே ரெயில்வே நிர்வாகம் மதுரை-செங்கோட்டை ரெயில் பாதையில் கூடுதல் ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க கோரப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தாம்பரம்-அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலை மேலும் தாமதிக்காது இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும். மேலும் செங்கோட்டையில் இருந்து கோவை, பெங்களூரு உள்ளிட்ட பெரு நகரங்களுக்கும் செங்கோட்டையில் இருந்து வேளாங்கண்ணிக்கும் ரெயில்கள் இயக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. தென்காசி தொகுதி எம்.பி. தனுஷ்குமாரும் விருதுநகர் தொகுதி எம்.பி.மாணிக்கம் தாகூரும் இது குறித்து ரெயில்வே அமைச்சகத்திடமும் தென்னக ரெயில்வே அதிகாரிகளிடமும் வலியுறுத்தி பேசி செங்கோட்டை-மதுரை அகல ரெயில்பாதையில் கூடுதல் ரெயில்கள் இயக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.

Next Story