6 பேருக்கு டெங்கு காய்ச்சல்: சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை


6 பேருக்கு டெங்கு காய்ச்சல்: சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 28 Sept 2019 3:09 AM IST (Updated: 28 Sept 2019 3:09 AM IST)
t-max-icont-min-icon

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 6 பேருக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் பலருக்கு காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் திருமால்பாபு நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம் மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருவதால் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பாதிக்கப்பட்ட பலர் தினமும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். 40 குழந்தைகள் உள்பட மொத்தம் 110 பேருக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 15 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்தது.

அவர்களின் ரத்த மாதிரியை எடுத்து பரிசோதனை செய்த போது, அதில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையொட்டி 6 பேரையும் தனி வார்டில் அனுமதித்து அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் நோய்க்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது பெய்து வரும் மழையால் வழக்கத்தை விட அதிகமாக 10 முதல் 20 சதவீதம் பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு சுற்றுச்சூழல் பாதிப்புதான் காரணம். எனவே சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story