வீட்டில் தூங்கியவர் கத்தியால் குத்தி கொலை; மனைவி உள்பட 2 பேரிடம் விசாரணை


வீட்டில் தூங்கியவர் கத்தியால் குத்தி கொலை; மனைவி உள்பட 2 பேரிடம் விசாரணை
x
தினத்தந்தி 30 Sept 2019 4:30 AM IST (Updated: 30 Sept 2019 12:58 AM IST)
t-max-icont-min-icon

வீட்டில் தூங்கியவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து அவரது மனைவி உள்பட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரைக்குடி,

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தந்தை பெரியார் நகர் சாய்பாபா காலனியை சேர்ந்தவர் மணிமுத்து(வயது 51). இவர் கடந்த 15 வருடங்களாக வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு, தற்போது சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார். இவரது மனைவி பூமதி(48). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்தநிலையில் மணிமுத்துவுக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்றுமுன்தினமும் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டதை தொடர்ந்து, மணிமுத்து இரவு வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று படுத்து தூங்கினார். நேற்று காலை வெகுநேரமாகியும் அவர் எழுந்து வராததால், அவரது குடும்பத்தினர் மாடிக்கு சென்று பார்த்தனர். அப்போது மணிமுத்து உடம்பின் பல பகுதிகளில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து அவரது மனைவி பூமதி, காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் சம்பவ இடத்திற்கு நேரடியாக வந்து விசாரணை நடத்தினார். அதில் பூமதிக்கும், மண்டபத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கும் பழக்கம் இருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் வேல்முருகனை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர். அங்கு இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அதில் இவர்களுடன் மற்றும் சிலரும் சேர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் மணிமுத்துவின் குடும்பத்தினரையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மணிமுத்து, பூமதி இடையே ஏற்பட்ட பிரச்சினையால் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று தெரியவருவதை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story