தஞ்சை அருகே முன்விரோதத்தில் வாலிபர் வெட்டிக்கொலை 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை


தஞ்சை அருகே முன்விரோதத்தில் வாலிபர் வெட்டிக்கொலை 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 1 Oct 2019 4:45 AM IST (Updated: 1 Oct 2019 1:25 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே முன்விரோதத்தில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் மெலட்டூர் அருகே உதாரமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயபால். இவருடைய மகன் செல்வக்குமார்(வயது30). இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு மீன் வாங்குவதற்காக பள்ளியக்கிரஹாரத்திற்கு வந்தார். பின்னர் மீன் வாங்கிக்கொண்டு இரவு நேரத்தில் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். கூடலூர் சுடுகாடு அருகே சென்றபோது இருளில் மறைந்து நின்ற மர்ம நபர்கள் திடீரென வாள், அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் செல்வக்குமாரை வழிமறித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், பின்னர் சுதாரித்துக்கொண்டு அந்த கும்பலிடம் இருந்து தப்பிச்செல்ல முயன்றார். ஆனால் அந்த கும்பல் அவரை அங்கிருந்து நகர விடாமல் தாங்கள் வைத்திருந்த வாள் மற்றும் அரிவாளால் சரமாரியாக செல்வக்குமாரை வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த அவர், சாலையோர பள்ளத்தில் வளர்ந்திருந்த முட்புதருக்குள் மோட்டார் சைக்கிளுடன் விழுந்தார். அப்படியும் விடாத மர்ம நபர்கள் அவரை மீண்டும் வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

போலீசார் விசாரணை

முட்புதருக்குள் செல்வக்குமார் கிடந்ததால் யாருக்கும் தெரியவில்லை. அந்த சாலையில் வாகனங்களில் சென்றவர்கள் வழக்கம்போல் சென்று வந்தனர். நேற்று காலையில் மோட்டார் சைக்கிளுடன் செல்வக்குமார் கொலை செய்யப்பட்டு கிடப்பதை அந்த வழியாக சென்ற சிலர் பார்த்தனர். உடனே இது குறித்து தஞ்சை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது சம்பவ இடத்தில் வாள் ஒன்று கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து செல்வக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியபோது, முன்விரோதம் காரணமாக செல்வக்குமார் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

முன்விரோதம்

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

கடந்த ஆண்டு உதாரமங்கலத்தில் பொங்கல் விழா நடந்தபோது ஒலிபெருக்கியில் பாடல் ஒலிபரப்பப்பட்டது. இந்த பாடலுக்கு பலரும் ஆடி மகிழ்ந்தனர். அந்த நேரத்தில் செல்வக்குமார் தரப்புக்கும், மணிகண்டன் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதால் கைகலப்பு ஏற்பட்டது. உடனே இருதரப்பினரையும் சிலர் சமாதானம் செய்து வைத்தனர்.

இதையடுத்து மெலட்டூர் போலீஸ் நிலையத்தில் மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் செல்வக்குமார் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு இருதரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு மணிகண்டனின் தாய் வீட்டில் இருந்தபோது அரிவாளுடன் வந்து ஒருவர் மிரட்டி சென்றுள்ளார். இதற்கு செல்வக்குமார் தான் தூண்டுதலாக இருந்து இருக்கலாம் என மணிகண்டன் நினைத்தார். இப்படி இவர்களுக்குள் தொடர்ந்து இருந்து வந்த பிரச்சினை காரணமாக செல்வக்குமார் கொலை செய்யப்பட்டுள்ளார்.

5 பேரிடம் விசாரணை

மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து உதாரமங்கலத்தை சேர்ந்த மணிகண்டன்(24), ஏசுதாஸ்(25), அஜித்குமார், அம்மன்பேட்டையை சேர்ந்த சிலம்பரசன், மாங்குடியை சேர்ந்த ஆனந்த்(20) ஆகியோரை தாலுகா போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story