வனப்பகுதி சாலைகளில் வாகனங்களை நிறுத்தி ‘செல்பி’ எடுத்தால் அபராதம் - வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை


வனப்பகுதி சாலைகளில் வாகனங்களை நிறுத்தி ‘செல்பி’ எடுத்தால் அபராதம் - வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை
x
தினத்தந்தி 1 Oct 2019 10:45 PM GMT (Updated: 1 Oct 2019 7:26 PM GMT)

கோவையில் உள்ள வனப்பகுதி சாலைகளில் வாகனங்களை நிறுத்தி ‘செல்பி’ எடுத்தால் அபராதம் விதிக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை,

கோவை வனக்கோட்டத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் காட்டு யானை, புலி, சிறுத்தைப்புலி உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்த வனவிலங்குகள் வனப்பகுதி வழியாக செல்லும் ரோட்டில் அவ்வப்போது கடந்து செல்லும். இதை பார்க்க பலர் வனப்பகுதி வழியாக செல்லும் சாலையில் சென்று வருகிறார்கள்.

இதுதவிர கோவையில் இருந்து ஆனைக்கட்டி செல்லும் சாலை, மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் அடிக்கடி காட்டு யானை, சிறுத்தைப்புலி, காட்டெருமை கடந்து செல்லும். இதை பார்க்க காலை மற்றும் மாலை நேரத்தில் அங்கு பலர் செல்வது வழக்கம்.

இவ்வாறு செல்பவர்கள் சாலை ஓரத்தில் தங்களின் வாகனங்களை நிறுத்தி வனவிலங்குகள் செல்லும்போது ‘செல்பி’ எடுத்து வருகிறார்கள். அவ்வாறு செய்யும்போது அவர்கள் அடிக்கடி வனவிலங்குகளிடம் சிக்கிக்கொள்கிறார்கள். இதைத்தடுக்க ஆங்காங்கே மலைப்பாதையில் எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டு உள்ளது.

இதையும் மீறி சில இடங்களில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள், வாகன ஓட்டிகள் சாலை ஓரத்தில் வாகனங்களை நிறுத்தி வனப்பகுதிக்குள் சென்று ‘செல்பி’ மற்றும் புகைப்படம் எடுத்து வருகிறார்கள். எனவே வனப்பகுதி வழியாக செல்லும் சாலையில் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி ‘செல்பி’ எடுக்கக்கூடாது என்று வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை கோட்டத்தில் ஆனைக்கட்டி, மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி அருகே, பூண்டி கோவிலுக்கு செல்லும் வழி, பாலமலை, உள்பட பல்வேறு பகுதிகளில் அதிகமாக விதிமுறை மீறல் சம்பவம் நடந்து வருகிறது. குறிப்பாக ஆனைக்கட்டி, வனக்கல்லூரி அருகேதான் அதிகளவில் வாகன ஓட்டிகள் சாலை ஓரத்தில் வாகனங்களை நிறுத்தி ‘செல்பி’ எடுப்பது அதிகரித்து விட்டது.

இந்த பகுதியில் காட்டு யானைகள், புலி, காட்டெருமை கடந்து செல்லும் பகுதி ஆகும். அவர்கள் வனவிலங்குகளை பார்த்ததும் அருகில் சென்று தொந்தரவும் செய்து வருகிறார்கள். இவ்வாறு செய்பவர்களைதான் வனவிலங்குகள் துரத்துகிறது. இதனால் தான் மனித-வனவிலங்கு மோதல்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாகி வருகிறது.

எனவே இவ்வாறு செய்வதை வாகன ஓட்டிகள் தவிர்க்க வேண்டும். வனப்பகுதி, வனவிலங்குகள் வாழும் பகுதி ஆகும். வனப்பகுதியில் உள்ள சாலைகளில் செல்லும்போது வழியில் வனவிலங்குகள் குறுக்கிட்டால், அவற்றை பார்த்து மகிழலாம். ஆனால் அதற்கு பதிலாக சாலை ஓரத்தில் வாகனங்களை நிறுத்தி, வெளியே வந்து வனவிலங்குகளை தொந்தரவு செய்வது குற்றம் ஆகும்.

அதைத்தடுக்கதான் வனப்பகுதி வழியாக செல்லும் சாலையில் வனவிலங்குகள் கடக்கும் பகுதியில் ஆங்காங்கே எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது. அதையும் மீறி அங்கு வாகனங்களை நிறுத்தி ‘செல்பி’, புகைப்படம் எடுப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன் வனபாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story