தாந்தோன்றிமலையில் நிகழ்ச்சியை தடுத்தவர்கள் மீது நடவடிக்கை கோரி நாடக நடிகர்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு


தாந்தோன்றிமலையில் நிகழ்ச்சியை தடுத்தவர்கள் மீது நடவடிக்கை கோரி நாடக நடிகர்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு
x
தினத்தந்தி 2 Oct 2019 4:30 AM IST (Updated: 2 Oct 2019 1:57 AM IST)
t-max-icont-min-icon

தாந்தோன்றிமலையில் நிகழ்ச்சியை தடுத்தவர்கள் மீது நடவடிக்கைகோரி நாடக நடிகர்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்தனர்.

கரூர்,

கரூர் தாந்தோன்றிமலையில் நாடக நடிகர் சங்க அலுவலகம் உள்ளது. நேற்று காலை அந்த சங்க அலுவலகத்தில் இருந்து பொன்னர்-சங்கர் மன்னர்களை போல் வேடமிட்டு அவர்களது வாழ்க்கை வரலாறு தொடர்பான கதை பாடலை உடுக்கை அடித்து பாடியவாறே நாடக நடிகர்கள் எதிரேயுள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நடந்து வந்தனர். பின்னர் அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜனிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், நாடக நடிகர்களெல்லாம் ஒன்றிணைந்து நீண்ட கால பொன்னர்-சங்கர் வரலாற்றினை கோவில் திருவிழா போன்ற விஷேச நிகழ்ச்சிகளின் போது கதை பாட்டாக படித்து தற்போதைய தலைமுறையினருக்கு தெரியப்படுத்துகிறோம். இதன் மூலம் தான் வாழ்க்கை நடத்தி வருகிறோம்.

சட்டம் ஒழுங்கு பிரச்சினை

இந்த நிலையில் சமீபத்தில் தாந்தோன்றிமலையில் நாங்கள் பொன்னர்-சங்கர் வரலாற்றை தொகுத்து வழங்கி கொண்டிருந்தபோது, ஒரு குறிப்பிட்ட சாதியை இழிவாக பேசுவதாக சிலர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வந்து எங்களது நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினர். பின்னர் பொன்னர்-சங்கர் நாடகத்தை இனிமேல் நடத்தக்கூடாது என கூறி எங்களிடம் தாந்தோன்றிமலை போலீசார் எழுதி வாங்கி கொண்டனர்.

இது எங்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உள்ளது. எனவே தொடர்ந்து பொன்னர்-சங்கர் நாடகத்தை நடத்துவதற்கு வழிவகை செய்ய வேண்டும். எங்கள் மீது தவறான குற்றச்சாட்டினை வைத்தவர்களை பிடித்து விசாரித்து சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர். மனுவை பெற்று கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, இது குறித்து மாவட்ட கலெக்டர் அன்பழகனிடம் கலந்து பேசி சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நாடக நடிகர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம்

முன்னதாக நிருபர்களிடம் கரூர் நாடக நடிகர்கள் தெரிவிக்கையில், கரூர், திருச்சி, நாமக்கல், ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பொன்னர்-சங்கர் வாழ்க்கை வரலாறு மக்களுக்கு நெருக்கமானதாக இருக்கிறது. இதனை தெரியப்படுத்தும் பொருட்டு தான் நாங்கள் காலங்காலமாக அதனை நாடகமாக நடத்தி வருகிறோம். இதை தவிர வள்ளி திருமணம், காத்தவராயன், அரிச்சந்திரா, கோவலன், பவளக்கொடி, சாவித்திரி, வீரபாண்டிய கட்டபொம்மன், மதுரை வீரன் உள்ளிட்டவர்களின் வரலாற்றையும் பாடலாக பாடி வருகிறோம். இந்த நிலையில் திடீரென தாந்தோன்றிமலையில் பொன்னர்-சங்கர் நாடகம் நடத்தக்கூடாது என கூறுவது வருத்தம் அளிக்கிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனில் நாடக நடிகர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம் என்றனர். 

Next Story