சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அறக்கட்டளை மூலம் புத்துயிர் பெறும் மாமல்லபுரம் கோனேரி நீர்நிலை


சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அறக்கட்டளை மூலம் புத்துயிர் பெறும் மாமல்லபுரம் கோனேரி நீர்நிலை
x
தினத்தந்தி 2 Oct 2019 10:15 PM GMT (Updated: 2 Oct 2019 10:24 PM GMT)

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அறக்கட்டளை மூலம் மாமல்லபுரம் கோனேரி நீர்நிலை புத்துயிர் பெற்று வருகிறது.

சென்னை,

தமிழகத்தில் நீர் ஆதாரங்களை பாதுகாக்க தவறியதன் விளைவு இன்றைக்கு மக்கள் தண்ணீருக்காக பரிதவிக்கும் நிலை உள்ளது. எனவே தமிழக அரசு குடிமராமத்து திட்டத்தை தொடங்கி, அதன் மூலம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

நீர் ஆதாரங்கள், அடுத்த தலைமுறையின் வாழ்வாதாரம் என்பதை கருத்தில் கொண்டு இந்திய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அறக்கட்டளையும் (இ.எப்.ஐ.) நீர்நிலைகளை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் தனிக்கவனம் செலுத்தி வருகிறது.

இதுதொடர்பாக அந்த அறக்கட்டளையின் நிறுவனர் சி.அருண் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:-

எங்கள் அறக்கட்டளை மூலம் தாம்பரம் கரசங்கள் ஏரி, சோழிங்கநல்லூர் தாமரைகேணி, செம்மஞ்சேரி அரசன்கழனி, நெல்லை கீழாம்பூர் ஏரி, கோவை செல்வ சிந்தாமணி குளம், வடலூர் அய்யன் ஏரி, ஓசூர் அலசநத்தம் ஏரி உள்பட 19 மாவட்டங்களில் 99 ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளன.

100-வது ஏரியாக மாமல்லபுரம் கோனேரி ஏரி தூர்வாரும் பணியை மேற்கொண்டுள்ளோம். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவிடம் சிறப்பு அனுமதி பெற்று கடந்த 2 வாரங்களாக உள்ளூர் மக்களின் முழு ஒத்துழைப்புடன் இப்பணி நடைபெற்று வருகிறது.

அறிவியல் மற்றும் விஞ்ஞானரீதியாக திட்டமிடப்பட்டு எந்திரங்கள் மூலம் இப்பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நீர்நிலையை ஆழப்படுத்தி நீரை தேக்கி வைத்து, பறவைகள் கூடு கட்டி வாழ்வதற்கு ஏற்ப பணிகள் நடக்கின்றன.

குளத்தை சுற்றி தேங்கி உள்ள கழிவுகளை அகற்றுதல், நீர்நிலைகளை தூர்வாருவதால் ஏற்படும் நன்மைகள், பயன்கள் குறித்து உள்ளூர் மக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி-சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோரின் சிறப்பு வாய்ந்த சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சூழ்நிலையில், அங்கு நடைபெறும் இப்புனரமைப்பு பணி நீர்நிலைகளை பாதுகாப்பதில் தமிழக மக்களின் ஈடுபாடு, அர்ப்பணிப்பு உணர்வை பிரதிபலிக்கும் என்று நம்புகிறோம்.

கோனேரி ஏரி புனரமைப்பு பணி வருகிற 9-ந்தேதி நிறைவு பெறுகிறது. பாழ்பட்டு கிடக்கும் ஏரிகள், குளங்களை அடையாளம் கண்டு அதனை தூர்வாரி புனரமைக்கும் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story