சின்னசேலம் அருகே, பள்ளி பஸ் சக்கரத்தில் சிக்கி குழந்தை பலி


சின்னசேலம் அருகே, பள்ளி பஸ் சக்கரத்தில் சிக்கி குழந்தை பலி
x
தினத்தந்தி 4 Oct 2019 3:45 AM IST (Updated: 3 Oct 2019 11:24 PM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் அருகே பள்ளி பஸ் சக்கரத்தில் சிக்கி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

சின்னசேலம், 

கள்ளக்குறிச்சி அடுத்த சின்னசேலம் அருகே உள்ள வி.மாமாந்தூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் தர்மதுரை(வயது 27). தொழிலாளி. இவருடைய மனைவி காந்திமதி. இவர்களுக்கு 3½ வயதில் மதுமித்ரா என்ற மகளும், 1½ வயதில் பவபிரஜித் என்ற மகனும் இருந்தனர். இதில் மதுமித்ரா அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகிறாள். இதற்காக இவள் தனியார் பள்ளிக்கு சொந்தமான பஸ்சில் சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்று விட்டு மதுமித்ரா பள்ளி பஸ்சில் வந்தாள். அப்போது அவரை வீட்டுக்கு அழைத்து செல்வதற்காக தர்மதுரை தனது வீட்டின் முன்பு நின்று மகளை பஸ்சில் இருந்து இறக்கினார். இதற்கிடையே வீட்டில் இருந்து வெளியே வந்த குழந்தை பவபிரஜித், பஸ்சின் முன்புறம் சென்று நின்றது.

இதையடுத்து மதுமித்ரா இறங்கியதும், குழந்தை பஸ்சின் முன்பு நிற்பதை அறியாத டிரைவர் பஸ்சை இயக்கினார். இதில் பஸ் மோதி குழந்தை கீழே விழுந்தது. இதில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி பவபிரஜித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த தர்மதுரை மற்றும் காந்திமதி கதறி அழுதனர். இதற்கிடையே இதுபற்றி அறிந்த கீழ்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பவபிரஜித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story