தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 40 ஆயிரம் எக்டேரில் சம்பா, தாளடி சாகுபடி


தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 40 ஆயிரம் எக்டேரில் சம்பா, தாளடி சாகுபடி
x
தினத்தந்தி 9 Oct 2019 4:00 AM IST (Updated: 9 Oct 2019 12:43 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 40 ஆயிரம் எக்டேரில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் சாகுபடி பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தஞ்சாவூர்,

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக மேட்டூர் அணை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி திறக்கப்படும். அணை குறிப்பிட்ட தேதியில் திறக்கப்பட்டால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரித்து சம்பா சாகுபடி பரப்பளவு குறையும்.

தாமதமாக திறக்கப்பட்டால் குறுவை குறைந்து சம்பா சாகுபடி அதிகரிக்கும். ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாதால் மேட்டூர் அணை ஜூன் மாதம் 12-தேதி திறக்கப்படவில்லை. இதையடுத்து மேட்டூர் அணை தாமதமாக ஆகஸ்டு 13-ந்தேதி திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்தவுடன் அங்கிருந்து 17-ந்தேதி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

சம்பா நடவு பணி

இதையடுத்து தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி சாகுடிக்கான பணிகள் தீவிரமாக தொடங்கின. தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரம் எக்டேர் சாகுபடிசெய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதற்கு தேவையான விதைநெல், உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டன.இதை யடுத்து சம்பா, தாளடி சாகுபடிக்கான நாற்றங்கால் தயாரிக்கும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டனர். இதுதவிர மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேரடி நெல் விதைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி தற்போது தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம், திருவிடைமருதூர், ஒரத்தநாடு, பாபநாசம், அம்மாப்பேட்டை பகுதிகளில் சம்பா, தாளடி சாகுடி பணிகள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன.

40 ஆயிரம் எக்டேர்

தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 40 ஆயிரம் எக்டேரில் சம்பா, தாளடி சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 34 ஆயிரம் எக்டேரில் நடவு மூலமும், 6 ஆயிரம் எக்டேரில் நேரடி நெல் விதைப்பு மூலமும் சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொடர்ந்து சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இது குறித்து தஞ்சை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஜஸ்டின் கூறுகையில், ‘‘இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, அனைத்து வாய்க்கால்களிலும் பாசனத்துக்கு கொண்டு செல்லப்படுவதால் சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு சாகுபடி இலக்கான 1 லட்சத்து 35 ஆயிரம் எக்டேரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 95 சதவீதத்துக்கும் மேல் இந்த மாத இறுதிக்குள் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து பகுதிகளிலும் நடவுப்பணிகளை இந்த மாத இறுதிக்குள் முடிக்குமாறு விவசாயிகளை கேட்டுக்கொண்டுள்ளோம்’’என்றார்.

Next Story