சாலை பணியாளர்களுக்கு 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும் - தர்மபுரியில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்


சாலை பணியாளர்களுக்கு 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும் - தர்மபுரியில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 9 Oct 2019 4:00 AM IST (Updated: 9 Oct 2019 3:26 AM IST)
t-max-icont-min-icon

சாலை பணியாளர்களுக்கு ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த சங்க மாநில கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தர்மபுரி,

தமிழ்நாடு சாலை பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் தர்மபுரி பெரியார் மன்றத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க மாநில தலைவர் அர்ச்சுனன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் பாஸ்கர் வரவேற்றார். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் செல்வராஜ், ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க தர்மபுரி மாவட்ட பொதுச்செயலாளர் மணி, உள்ளாட்சி பணியாளர் சங்க மாநில செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக வரன்முறைபடுத்த வேண்டும். பணி நீக்க காலத்திற்குரிய ஊதியத்தை வழங்க வேண்டும். நெடுஞ்சாலைகள் பராமரிப்பை தனியாரிடம் வழங்க கூடாது. பணியின்போது இறந்த சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்கவேண்டும்.

ஊதியத்தில் உள்ள முரண்பாடுகளை களைந்து சாலைபணியாளர்களுக்கு முறையான ஊதியத்தை வழங்க வேண்டும். சாலைபணியாளர்களுக்கு தேவையான தளவாட பொருட்களை வழங்க வேண்டும். ஊதியக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும்.

சாலை பணியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் அரசு பணியாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாநில பொருளாளர் பாஸ்கர் நன்றி கூறினார்.

Next Story