செங்கம் செய்யாற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் - மணல் கடத்தலை தடுக்க விவசாயிகள் கோரிக்கை


செங்கம் செய்யாற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் - மணல் கடத்தலை தடுக்க விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 8 Oct 2019 10:15 PM GMT (Updated: 8 Oct 2019 9:57 PM GMT)

செங்கம் செய்யாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆற்றில் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கம், 

செங்கம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இதனால் குப்பநத்தம் அணையில் நீரின் அளவு உயர்ந்துள்ளது. மேலும் அருகில் இருக்கும் ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

இந்தநிலையில் செங்கம் செய்யாற்றில் தண்ணீர் வர தொடங்கியுள்ளது. இந்த ஆற்றில் இருந்து அருகில் உள்ள ஏரிகளுக்கு கால்வாய் வழியாக தண்ணீர் செல்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு செய்யாற்றில் தண்ணீர் வருவதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பலர் ஆற்றை பார்வையிட்டு செல்கின்றனர். தங்களது செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். விவசாயிகள் தேங்காய் உடைத்து கற்பூர ஆரத்தி எடுத்து வணங்கி வரவேற்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

தற்போது ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். ஆற்றையொட்டி உள்ள விவசாய கிணறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தீத்தாண்டப்பட்டு, கரியமங்கலம், நாச்சிப்பட்டு, வளையாம்பட்டு போன்ற பகுதிகளில் உள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் செல்கிறது.

இந்த ஆற்றில் இருந்து பலர் மணல் கடத்துகின்றனர். இதனால் பல இடங்களில் ஆற்றில் பள்ளங்கள் உள்ளன. தற்போது ஆற்றில் தண்ணீர் வருவதால் அந்த பள்ளங்களில் மணல் பரந்து மூடும். இனிவருங்காலங்களில் மணல் திருட்டு நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே நிலத்தடி நீர் ஆதாரத்தை பாதுகாக்க வருவாய்த்துறை மற்றும் காவல்துறை முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து, மணல் கடத்தலை தடுக்க வேண்டும். தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story